சட்டையை கிழிக்க மாட்டோம்: ஸ்டாலினை தாக்கும் தமிழிசை
சமீபத்தில் சென்னையில் நடந்த முரசொலி பவளவிழாவில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் அ.தி.மு.க-வில் ஏற்பட்டிருக்கும் பிளவைப் பயன்படுத்திக் காலூன்ற பா.ஜ.க திட்டமிடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, ‘எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுவதுபோல’ என்கிற பழமொழியைத்தான். மோடி ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம்… இதைச் செய்வோம்… என்று கதைவிட்டார். ஆனால், மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது” என்று மத்தியில் ஆளும் பாஜகவை வறுத்தெடுத்தார்.
இதற்கு பதில் கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘முரசொலி பவள விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தன் உரை முழுவதும் பா.ஜ.க-வையே தாக்கிப் பேசியுள்ளார். அவரின் ஆதங்கத்தின் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி.-யின் வளர்ச்சி, தாக்கம் அவருக்கு தெரியத் தொடங்கியிருக்கிறது. மோடி அரசு, மோசடி அரசு என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், 2ஜி நாயகர்கள் நம்மை விமர்சிப்பது விந்தையாக இருக்கிறது. திராவிட இயக்க வாரிசுகள், திகார் ஜெயிலுக்குப் போன வரலாறு மறக்குமா?
தமிழ், தமிழ் என்று சொல்லி அரியணை ஏறியவர்கள், ஆறுமுறை ஆண்டபோதும் தமிழை அரியணை ஏற்றினார்களா? தமிழ் இனக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு இலங்கையில் தமிழினம் அழிந்தபோதும் பதவி சுகத்தால் அதற்குத் துணை போனவர்கள். மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
கறுப்புப்பணத்தை ஒழிக்கத்தானே மோடி ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். நதிநீர் இணைப்புக்குப் பிள்ளையார் சுழி போட்டது பா.ஜ.க. ஆட்சியில்தான் தற்சமயம் மோடி ஆட்சியில் நதி நீர் இணைப்புக்கு முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பிளவைப் பயன்படுத்திக் காலூன்ற பா.ஜ.க. முயற்சி செய்வதாகக் கூறுகிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி தன் சட்டையைத் தானே கிழித்துக்கொண்டு பதவி சுகம் தேடி கோட்டைக் கனவுடன் இலவு காத்த கிளியாக, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருப்பது யார்? உங்கள் சவாலை எதிர்கொண்டு ஜனநாயக முறையில் பா.ஜ.க. வெற்றிகொள்ளும்’ என்று ஸ்டாலினுக்கு மறுமொழி கொடுத்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.