ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை! பன்னீர்செல்வம் மீது தமிழிசை சாடல்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாறி மாறி கூறி வரும் கருத்து வேடிக்கையாக உள்ளது’ என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு கருத்துகளை கடந்த சில நாட்களா ஓபிஎஸ் கூறிவருகிறார். சில நாள்களுக்கு முன்பு, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று தம்பிதுரையிடம் கூறியதாகவும், அதை, சசிகலா குடும்பத்தினர் தடுத்ததாகவும் ஓபிஎஸ் கூறியிருந்தார்.
ஆனால் சென்னையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தடுத்தார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் கருத்து வேடிக்கையாக உள்ளது என்று கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் பரிசுப்பொருள்கள் எதையும் தேர்தல் ஆணையம் இதுவரை பிடிக்கவில்லை என்று தெரிவித்த தமிழிசை, பா.ஜ.க வெற்றி பெற்றால்… ஆர்.கே.நகர்த் தொகுதி, பிரதமர் கவனத்தில் இருக்கும் என்றார்.