நவோதயா பள்ளிகளை அரசியல்வாதிகள் எதிர்ப்பது இதற்குத்தான். தமிழிசை குற்றச்சாட்டு
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது குறித்து பல்வேறு கட்சிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிப்பதன் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது என்பதே இவர்களின் குற்றச்சாட்டு
இந்த நிலையில் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பவர்கள் குறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘நவோதயா பள்ளிகளை தடுப்பது தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் பாஜக பிரமுகரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏழை, எளியவர்களுக்கு எதிரானவர்கள்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நவோதயா பள்ளியின் வருகையால் தமிழகத்தில் கல்வியின் தரம் உயரும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.