முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பில் மயங்கி மிகப்பெரிய பிழையை செய்துவிட்டார் விஜயகாந்த். தமிழிசை
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தேமுதிகவை வளைத்து போட கஜினி முகம்மது போல டெல்லியில் இருந்து பல தலைவர்கள் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்தும் இந்த கூட்டணிக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்தும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறிய கருத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நினைத்தோம், பேச்சு வார்த்தை நடத்தினோம். எங்களோடு விஜயகாந்த் அவர்கள் இணைந்திருந்தால் பலம் பெற்றிருப்பார். இப்படி ஒரு முடிவை எடுத்ததின் மூலம் அவருடைய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பிழையை அவர் செய்திருக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாரதிய ஜனதாவுடன் விஜயகாந்த் வந்திருந்தால் அவர் தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது. தமிழக மக்களுக்கு அவர் என்னென்ன நல்லது செய்ய முடியும் என்று நினைக்கிறாரோ அதை உடனுக்குடன் செய்ய முடியும். இதையெல்லாம் அவர் நினைக்கத் தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
மக்கள் நலக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர் கூறியபோது, “மக்கள் நலக் கூட்டணியில் மக்களின் அறிமுகம், பின்புலம் கொண்ட தலைவர்கள் என்று யாரும் கிடையாது. அந்தக் கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் ஊழலைப் பற்றி பேச முடியாது. அவர்கள் இருவருமே ராஜ்ய சபா சீட்டுக்காக கழகங்களிடம் மாறி மாறி கதறியவர்கள்தான். அதே போல் காங்கிரஸ் தயவுடன் வென்றவர்தான் திருமாவளவன். யாருக்கும் அங்கே தனித்த அடையாளம் என்று ஒன்றுமில்லை. இந்த கூட்டணி யாருக்கும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. யாருடன் கூட்டணி சேர்கிறோம் என்பது முக்கியம். நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி சேர முயற்சித்ததுக்கும் மற்றவர்கள் முயற்சித்ததுக்கும் வித்தியாசம் உண்டு. முதல்வர் வேட்பாளர் என்ற வெறும் அறிவிப்பிலும், கனவு வார்த்தையிலும் மயங்கி மக்களுக்காக சேவை செய்யும் வாய்ப்பை தேமுதிக இழந்து விட்டது’ என்று கூறினார்.