இம்மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா போட்டியிடும் என்று முடிவு செய்துள்ள நிலையில், தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்து பேசினார்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக;வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ம.தி.மு.க. எதிர்வரும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தது. மேலும் திமுக, தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் ஆளுங்கட்சிக்கு ஒரே சவாலாக இருப்பது பாஜக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார்.
பாஜக தமிழக தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வைகோவிடம் தங்களது கட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் ம.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ம.தி.மு.க. ஆதரவு வழங்கும். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது. மோடி ஆட்சி சிறப்பாக உள்ளது. தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டு இருக்கிறது” என்றார்.