பாஜக அணியில் யார் யார் இருக்கிறார்கள்? தமிழிசை செளந்திரராஜன் விளக்கம்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வரும் நிலையில், பாஜக கூட்டணி யார் யார் இருக்கின்றனர், எந்த கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பதை இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை கொண்ட மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 2016-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. 234 தொகுதிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்து வருகிறது.
பிகார் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இன்னும் 30 நாளில் பாஜக தேர்தல் அறிக்கை தயாராகி விடும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதி உதவியை அளித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால், பாஜக அணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தலைவர்கள் ஒன்று கூடி கலந்தாலோசித்து அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள்’ இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.