தமிழக சட்டப்பேரவையின் குளிர் காலக் கூட்டத்தொடர் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது. சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொறடா மனோகரன், தி.மு.க. கொறடா சக்ரபாணி, தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரை, வெள்ளி மற்றும் திங்கட்கிழமை வரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர்களுக்கு சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர் கூடுதல் செலவிற்கான 2வது துணை நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வருகின்ற 5 ஆம் தேதி வரை பல்வேறு அலுவல்கள் நடைபெறும். துணை நிதிநிலை அறிக்கையில் உள்ள மானிய கோரிக்கைகள் உள்ளிட்டவற்றின் மீது 8 ஆம் தேதி விவாதம் மற்றும் உரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டப்பேரவை கூட்டத்தை 3 நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் இருப்பதால் குறைந்தது 5 நாட்களாவது கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் அலுவல் ஆய்வு கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.