தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
வெள்ளையர்களை விரட்டியடித்து நம் தாய்த் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே”
என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளின்படி நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் தான் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திட முடியும் என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டிட தன்னலமற்ற பல சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர். அத்தகைய விலை மதிப்பற்ற தியாகங்களைச் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தியாகச் சீலர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் போற்றி வணங்குதற்குரிய நன்னாள் இந்தச் சுதந்திரத் திருநாளாகும்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாகவும்; குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயாகவும்; மருத்துவப் படியை 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில்,தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் என பல்வேறு தியாகிகளின் நினைவகங்களை எழுப்பி சிறப்பித்து வருகிறது.
போராடிப் பெற்ற சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்து, அனைவரும் ஒன்றுபட்டு சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.