கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு தடை. பறவைக்காய்ச்சலை தடுக்க முதல்வர் உத்தரவு.

chicken
கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் அதிகளவு பரவி வருவதன் காரணமாக, அங்கிருந்து கோழி மற்றும் அது தொடர்பான பொருட்களை தமிழகத்துக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    கேரள மாநிலத்தில்  உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் சமீபத்தில் சுமார் 17000 வாத்துகள் திடீரென இறந்தன. இந்த வாத்துகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்தபோது அவை அனைத்தும் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு அதன் காரணமாக இறந்துள்ளன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு பரவி விடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-

1. நமது மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் எதுவும்  இல்லை என்றாலும், இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும்.

2. கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள், குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், கோழியினங்கள், கோழி இறைச்சி, அவற்றின் எரு உள்ளடக்கிய கோழியினப் பொருட்கள் கேரளம்-தமிழ்நாடு மாநில எல்லைகளில் நிறுத்தி திருப்பி அனுப்ப கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், போக்குவரத்து ஆணையர், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள். கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவர்.

3. கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்கள் மீது தெளிப்பான் மூலம் கிரிமிநாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இது செயல்படுத்தப்படும். மண்டல இணை இயக்குநர்கள் சோதனைச் சாவடிகளில் இப்பணிக்கான குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பர். இதற்கு தேவையான தெளிப்பான், கிருமி நாசினிகள் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவில் போதுமான அளவு இருப்பில் உள்ளன. இப்பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து, காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்குவர். ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து  தேவையான பணியாளர்கள் இதற்கென அனுப்பப்படுவர்.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

5. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுக்களின் செயல்பாட்டுக்கு தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.

6. தடுப்பு நடவடிக்கைப் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு  உபகரணங்கள், தெளிப்பான்கள், கிருமி நாசினிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது.  இவை கூடுதலாக தேவைப்பட்டால், தமிழ்நாடு மருத்துவ  சேவைக் கழகம்  அவற்றை வழங்கும்.

7. கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கோழிச் சந்தைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

8. கோழி இனங்களின் உடல்நிலை குறித்த விவரம் நாள்தோறும் பெறப்பட்டு கண்காணிக்கப்படும்.

9. கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் குஞ்சு பொறிப்பதற்கான வாத்து மற்றும் கோழிமுட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதன் விபரம் சேகரிக்கப்பட்டு, அவற்றை முழுவதுமாக அழித்துப் புதைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. இடம் பெயரும் பறவைகளின் நடமாட்டத்தை பறவைகள் சரணாலயங்களில் தலைமை வனப் பாதுகாவலர் கண்காணிப்பார்.

11. கேரள மாநிலத்தில் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை கோழி மற்றும் கோழியினங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்படுவதை நிறுத்தும்படியும், தமிழ்நாட்டிற்குள் வரும் ரயில்களில் போதுமான அளவு கிருமிநாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறும் தென்னக இரயில்வே கேட்டுக் கொள்ளப்படும். கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமலிருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

      இந்த ஆய்வுக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், அரசுத் துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply