ஆந்திராவில் தமிழர்கள் உள்பட 20 பேர் சுட்டுக்கொலை. ஆந்திர முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்.

encounterஆந்திர வனப்பகுதியில் ஆந்திர மாநில போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதில் 20 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை  மீறப்பட்டிருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

செம்மரம் வெட்டியதாக 10 தமிழர்கள் உள்பட 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறையினர் நேற்று சுட்டு கொலை செய்ததை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்ததில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நம்பத்தகுந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் செம்மரம் வெட்டியிருந்தால் கைது செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு பேர் பலியான இந்த நடவடிக்கையின்போது ஆந்திர அதிரடிப் படையினர் போதுமான நிதானத்துடன் செயல்பட்டார்களா என்பது குறித்து கவலை எழும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் சட்டவிரோத மரம் வெட்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களைப் பிடித்து சட்டப்படி தண்டிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இவ்வளவு பேர் பலியாகும் ஓர் அதிரடி நடவடிக்கை தேவைதானா? என்றும் தமிழக முதல்வர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்தச் சூழ்நிலைகளில், இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விரைவான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அப்போதுதான் உண்மைகள் நிறுவப்பட்டு, மனித உரிமை மீறல்கள் இருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை நிர்ணயிக்க முடியும் என்றும் மனித உரிமை மீறல்கள் இருக்குமாயின், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதும் முக்கியமானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply