பசுமாட்டிற்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாத கருணாநிதி. தமிழக அமைச்சர் கண்டனம்.

karunanidhi and sellur rajuதமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பசுவுக்கும் எருதுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை என்பதையே அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ”கருணாநிதியாலும், கருணாநிதி குடும்பத்தாலும் நடத்தப்பட்டு வரும் தி.மு.க. என்ற கட்சி தமிழகத்தை பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் ஒரு செல்லாத நோட்டாகிவிட்டது. இனிமேல் அந்த கட்சியையோ, கருணாநிதியையோ மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலையில், கூட்டுறவுத் துறையைப் பற்றி உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியில், 2006ல் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடனை திரும்ப வசூல் செய்ய முயற்சி நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் ஆட்சியின்போது, கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகளாக அவரது கட்சிக்காரர்கள் பொறுப்பேற்று செயல்பட்ட காலத்தில், ‘குரங்கு கையில் சிக்கிய பூமாலை’ போன்று கூட்டுறவு இயக்கத்தையே சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயிர்க்கடன்களை தனது கட்சிக்காரர்களுக்கே வழங்கி, கூட்டுறவுத் துறையையே பாழடித்து திவாலாக்கிவிட்டவர்தான் கருணாநிதி. கருணாநிதி, தனது கட்சிக்காரர்கள் முறைகேடாக வாங்கிய பயிர்க் கடன்களை, மக்களின் வரிப்பணத்தின் மூலமாக 2006ல் தள்ளுபடி செய்தவர்தான் கருணாநிதி. அந்த கடன் தள்ளுபடி தொகையை கூட கூட்டுறவு நிறுவனங்களுக்கு திரும்ப செலுத்தாதவர் தான் கருணாநிதி. அந்த கடன் தள்ளுபடி திட்டத்தில் பயன் அடைந்தவர்கள் பெரும் பணக்காரர்களும் கருணாநிதியின் கட்சிக்காரர்களும் தான்.

இதனால், ஏழை விவசாயிகளுக்கும், கூட்டுறவு நிறுவனங்களுக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏழை, எளிய மக்கள் தங்களுக்காக, தங்கள் நன்மைக்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கத்தை பாழடித்து, கூட்டுறவின் தத்துவத்தை குழி தோண்டி புதைத்தவர் அவர். கருணாநிதி ஆட்சி வருவதற்கு முன்பாக, இந்த கூட்டுறவு இயக்கம், இந்தியாவிற்கே முன்னோடியாக தொடங்கப்பட்டது. மிகப்பெரிய தனவந்தர்கள், தனது சொத்துக்கள் அனைத்தையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கியவர்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு, தனது கட்சி நிர்வாகிகள் கொள்ளையடிப்பதற்காக அவர்களை கூட்டுறவு நிறுவனங்களில் முறைகேடாக நியமித்தவர்தான் கருணாநிதி. உதாரணமாக, எரிவாயு கடன் ரூ.84 கோடியும், ஏழை தென்னை விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட கொப்பரை கொள்முதல் சலுகையில் முறைகேடாக ரூ.364 கோடி அளவிற்கு ஊழல் செய்ததை நாடே அறியும்.

ஜெயலலிதா 2001ல் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோது இந்த ஊழல்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது 2003ல் சட்டப்பூர்வமாக கிரிமினல் நடவடிக்கை எடுத்து வழக்கு தொடுத்தார்கள். வழக்கம்போல், கருணாநிதி தனது கட்சிக்காரர்களை மட்டும் விடுவித்துவிட்டு, பலதுறைகளை சேர்ந்த அப்பாவி அரசு அலுவலர்களை நட்டாற்றில்விட்டு 2009ல் அரசாணை வெளியிட்டவர்தான் கருணாநிதி. அப்பாவி அரசு அலுவலர்கள் இன்று வரை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதை அனைத்து அரசு அலுவலர்களும் அறிவார்கள். எனவே கூட்டுறவுத்துறை பற்றி பேச கருணாநிதிக்கு எந்த அருகதையும் இல்லை.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் உறுப்பினர் சுசிலா, க/பெ.முருகையன் என்பவருக்கு 2001-02ல் வழங்கப்பட்ட பயிர்க்கடன் அசல் ரூ.7,000 தவணை தவறி வசூலிக்கப்படாத நிலையில், 31.3.2006ல் நிலுவை இருந்த மொத்த கடன் ரூ.10,990 தள்ளுபடி செய்யப்பட்டு சான்று வழங்கப்பட்டது. அதன் பிறகு இவருக்கு மீண்டும் 25.8.2007ல் நெல் சாகுபடி செய்ய பயிர் கடன் வழங்கப்பட்டு, ரூ.18,105 தவணை தவறி உள்ள நிலையில், தற்போது அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி தேதியான 31.3.2006க்கு பிறகு வழங்கப்பட்ட கடனாகும். கருணாநிதி கூறிதைப்போல் தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக எந்த நோட்டீசும், யாருக்கும் அனுப்பப்படவில்லை என்பது தான் உண்மை.

இந்த அரசு, கருணாநிதி கூறியதைப்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு பசுமாட்டிற்கும் எருமை மாட்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைத் தான் அவரது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கூட்டுறவுத் துறை ஒரு பொற்காலத்தை கண்டறிந்திருக்கிறது. தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் முதல் மாவட்ட, மாநில இணையம் வரை அனைத்தும் மக்களின் நம்பிக்கையை பெற்று வரலாறு காணாத அளவிற்கு ஏரத்தாழ ரூ.42,625 கோடி அளவிற்கு வைப்பீடுகளை பெற்றுள்ளது. மேலும், அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் ஏழை எளிய, விவசாயிகளுக்கு ரூ.16,251 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 37 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளார்கள்.

இப்படி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக செயல்படும் தமிழக கூட்டுறவுத் துறை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறந்த சங்கங்களுக்கான பல பரிசுகளை தொடர்ந்து பெற்று வருகிறது. இந்த உண்மையை மறைத்து, கபட நாடகம் ஆடி எதையாவது கூறி இந்த அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் கருணாநிதியின் முயற்சிகள், மக்கள் மத்தியில் எடுபடாது. தமிழ்நாடும், தமிழக மக்களும் என்றும் ஜெயலலிதாவின் பின்னால்தான் உள்ளனர் என்பதை தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பூஜ்யத்தையும், தோல்விகளையும் பெற்றுவரும் கருணாநிதிக்கு இன்னுமா புரியவில்லை?” என்று கூறி உள்ளார்.

Leave a Reply