தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை. இருமாநில எல்லையில் பதட்டம்.

karnataka borderஇலங்கை சிங்களப்படையினர் மட்டுமே இதுவரை தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்று கொண்டிருந்த நிலை தற்போது மாறி, கர்நாடக வனத்துறையினர்களும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு தமிழக மீனவர்கள் கர்நாடக எல்லையில் இருந்த வனத்துறை சோதனை சாவடிக்கு தீவைத்துள்ளதால், இரு மாநில எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கோவிந்தப்பாடி, செட்டிப்பட்டி ஆகிய மலைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி, பாலாற்ற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை நோக்கி கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் கோவிந்தப்பாடியை சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைகாலன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி ஆகியோர் குண்டுக்காயம் அடைந்ததாகவும், கூறப்படுகிறது. இதில் பழனி பரிதாபமாக பலியாகி ஆற்றில் மிதந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழக கிராம மக்கள், தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், பாலாறு பகுதியில் உள்ள கர்நாடக வனத் துறையினரின் இரு சோதனைச் சாவடிகளையும் அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்தினர். சோதனைச் சாவடியில் இருந்த வயர்லெஸ் சாதனங்கள், பைக், ஆண்டெனா உள்ளிட்டவற்றை எரித்தும், உடைத்தும் சேதப்படுத்தினர்.

தமிழக மீனவரின் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக வனத் துறையின் உயர்நிலைக் குழுவை அமைக்கவும் கர்நாடக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் மதன் கோபால் அந்த மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply