தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது நேற்று இரவு மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியது. அது நேற்று இரவு புயலாக மாறியது அதற்கு ‘பைலின்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அது நேற்று இரவு நிலவரப்படி விசாகப்பட்டினத்தில் இருந்து 1,100 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது.
அந்த புயல் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கும் இடையே 12-ந் தேதி இரவு கரையை கடக்கும்.
இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு. அதிக பாதிப்பு வராது. ஆனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (வியாழக்கிழமை) அநேக இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும்.
குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்க்கலாம்.
மற்ற மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.