பள்ளிக்கு வரும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று முதல் திடீர்த்தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக, இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இருசக்கர மோட்டார் சைக்கிள்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என மாணவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்களை கண்டிக்கவும், அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறவும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் இந்த விஷயத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த பள்ளியின் பிரின்சிபல் அல்லது தலைமை ஆசிரியரே அசம்பாவிதத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.