தமிழகம் பெரியார் மண்ணா? பெரியாழ்வார் மண்ணா? தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகம் பெரியார் மண்ணா? பெரியாழ்வார் மண்ணா? தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகம் பெரியாரின் மண் என்று திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக கூறி வரும் நிலையில் தமிழகம் பெரியார் மண் அல்ல என்றும் இது பெரியாழ்வாரின் மண் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்

பா.ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழிசை பேசியதாவது: ஆன்மிக அரசியலை முன்னெடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆனால் ஆன்மிக அரசியலுக்கு முதல் முதலில் வித்திட்டது பா.ஜ.க. தான். தமிழகத்திலும் பா.ஜ.க. ஆன்மிக அரசியலை நடத்தி வருகிறது. காவி அரசியலும், ஆன்மிக அரசியலும் ஒன்றுதான். தேசிய கொடியில் காவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்திலும் காவி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா வளர்த்த தமிழல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ்.

மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மக்களுக்கான ஒரு நல்ல திட்டத்தை கூட ப.சிதம்பரம் கொடுக்கவில்லை. மோடியின் அரசை குறை சொல்ல அவருக்கு உரிமை இல்லை. அதுபோல் பட்ஜெட் பற்றி ராகுல்காந்தி குறை சொல்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் தேர்ச்சி பெறட்டும். அதன் பின்பு மோடியை குறை சொல்லலாம். அவரது கட்சியிலேயே அவர் தேர்ச்சி பெறாமல் இருக்கிறார்.

தமிழகத்தில் தான் அதிகப்படியான நகரங்களை, ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல் மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான மருத்துவத்தை ஏழை மக்கள் பெற முடியும்.

இதுபோன்ற மக்களுக்கான நல்ல பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது வேலை இல்லா திண்டாட்டம் இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் குறைந்துள்ளது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.

Leave a Reply