தேனியில் தினகரனின் முதல் பொதுக்கூட்டமா?

தேனியில் தினகரனின் முதல் பொதுக்கூட்டமா?

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சசிகலா சிறைக்கு சென்ற சில நாட்களில் பொதுக்கூட்டம் ஒன்றை பிரமாண்டமாக நடத்தி தனது வலிமையை காட்ட முடிவு செய்திருந்தார். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், திஹார் ஜெயில் என திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்ததால் பொதுக்கூட்டம் நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பியுள்ள தினகரன் தற்போது பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், துணைப்பொதுசெயலாளர் பதவியேற்றதும் முதன்முதலில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தை தேனியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தேனி ஓபிஎஸின் சொந்த மாவட்டம் என்பதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தனது முன்னாள் தொகுதி மக்கள் என்ற பாசத்தின் காரணமாகவும் தேனி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்சியை முதல்வர் பழனிச்சாமி பார்த்துக் கொள்வார் என்றும், கட்சியை தினகரன் நிர்வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், இந்த பொதுக்கூட்டத்தை முதலில் நடத்திவிட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய, தினகரன் தீர்மானித்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply