பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை சிறுவராக கருதமுடியாது. தமிழிசை செளந்திரராஜன்

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை சிறுவராக கருதமுடியாது. தமிழிசை செளந்திரராஜன்
tamilisai
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவகல்லூரி மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்த இளம் குற்றவாளி கடந்த ஞாயிறு அன்று சிறைத்தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தண்டனை முடிந்த ஒருவரை மேலும் சிறையில் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் தரப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ‘நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி என ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் படி, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தனிப்பட்ட ரீதியில் அவர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது. பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை சிறுவர் என எண்ண முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு தடை குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ஜல்லிக்கட்டு தடையை நீக்க பா.ஜ.க முழு முயற்சியோடு செயல்பட்டு வருவதாகவும், ஸ்டாலின் ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராடுவதாக சொல்வது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறிய தமிழிசை,  மத்திய அரசில் அவர்கள் பங்கு பெற்ற போது தடையை நீக்க முயற்சிக்காமல் இப்போது போராட்டம் நடத்துவதாக சொல்லி அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜக கூட்டணியில் வைகோவின் மதிமுக தவிர தேமுதிகவும், பாமகவும் இருப்பதாகவும், இருவரும் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக இதுவரை அறிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply