எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யும் தலைவராக இருக்கக் கூடாது. தமிழிசை சவுந்தரராஜன்
நேற்று சட்டமன்றத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே மின்சார துறை குறித்த விவாதம் நடந்தபோது அதிமுக உறுப்பினர் முத்தையா திமுகவின் 89 உறுப்பினர்களை 89 வயக்காட்டு பொம்மைகள் என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘”தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றும் un-parliamentary சொல் அல்ல. கெட்ட வார்த்தை அல்ல. மேலும், உறுப்பினர் பேசுகின்றபோது, யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர் வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றிப் பேசினார். இங்கிருக்கின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர், ஆளுங்கட்சி உறுப்பினர், வயல்காட்டுப் பொம்மைகள் என்று கூறியதைக் கேட்டதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல் காட்டும் வீரர்களாகத்தான் மாறியிருக்க வேண்டும். மேலும் அவர்களை வழி நடத்த வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யும் தலைவராக இருந்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.