1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தஞ்சை பெரிய கோவிலின் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் ராஜராஜ சோழன் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் தேரோட்டம் கடந்த 100ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
நின்றுபோன தேரோட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என தஞ்சை பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு புதிய தேர் செய்ய சமீபத்தில் நிதி ஒதுக்கியது. அதன்பின்னர் விறுவிறுவென புதிய தேர் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அந்த பணி முடிவடைந்து, வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த வெள்ளோட்டத்தில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய கோவிலுக்கு நூறு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கவிருப்பதை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றத்தை அடுத்து அன்றைய முதல்வர் கருணாநிதி விழா நடத்தினார். அதன்பின்னர் அவர் சில மாதங்களில் ஆட்சியை பறிகொடுத்தார். அதேபோல் இந்த ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா தஞ்சை கோவிலின் தேருக்காக நிதி ஒதுக்கிய சில மாதங்களில் பதவியிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.