தீபாவளி பண்டிகை தினத்தன்று, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் ரூ.120 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை ரூ.10 கோடி குறைவுதான் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முக்கியப் பண்டிகைகளின்போதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதும், மதுபானங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போதும், டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்த தகவல்களில் இருந்து டாஸ்மாக் கடைகளில் தீபாவளீக்கு முந்தைய நாளும் தீபாவளி தினத்தின்போதும். காலை முதல் இரவு வரை கூட்டத்தின் அளவு சீராக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, தீபாவளி பண்டிகையான புதன்கிழமை மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மூலமாக அரசுக்கு ரூ.120 கோடி கிடைத்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் கூறியது:
கடந்த மூன்று ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 2011-12-ஆம் நிதியாண்டில் 18 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவு, 2013-14-ஆம் நிதியாண்டில் 21 ஆயிரத்து 641 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாய் அளவில் பண்டிகைக் கால விற்பனை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மட்டும் ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு தீபாவளியைக் காட்டிலும் ரூ.10 கோடி குறைவாகும். கடந்த ஆண்டு ரூ.130 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுபானக் கூடங்களில் பணியாற்றுபவர்கள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை விற்பனை செய்கின்றனர். இதனால் அவை அரசின் கணக்கில் வராமல் கள்ளச்சந்தை போன்று செயல்படுகின்றன. இதனாலேயே இந்த ஆண்டு வருவாயில் குறைவு ஏற்பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.