மாற்று வேலை கொடுத்தால் மகிழ்ச்சியாக செல்வோம். டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு

tasmacதமிழகத்தில் மதுவிலக்கு தேவை என்ற போராட்டம் தற்போது வன்முறை வடிவில் மாறியுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு தரும்படி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவை கலெக்டரிம் கொடுத்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “‘நாங்களும் படித்துவிட்டு வேறு வேலை கிடைக்காததால்தான் டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு வந்தோம். எங்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது. அரசு மதுக்கடைகளை மூடி எங்களுக்கு மாற்று வேலை கொடுத்தால் மகிழ்ச்சியாக செல்வோம். அதுவரை மதுக்கடையில்தான் வேலை செய்ய முடியும்.

தற்போது மதுக்கடைக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்துவதால் நாங்கள் தாக்கப்படுகிறோம். சேலத்தில் செல்வம் என்ற ஊழியர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை நாங்கள் வனமையாக கண்டிக்கிறோம். காவல்துறையும், டாஸ்மாக் அதிகாரிகளும் இரவில் கடையில் படுக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள். முடியாது என்றால் வேலை இல்லை என்கிறார்கள். போராட்டம் நடக்கும் சமயம் மட்டும் போலீஸ் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். மற்ற நேரங்களில் நாங்கள்தான் பாதுகாக்க வேண்டுமாம்.

தற்போது உயிரிழந்த செல்வம் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணத்தொகை அரசு வழங்க வேண்டும். அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் ஊழியர்களான எங்களை தாக்காமல் காக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

Leave a Reply