இலக்கை தாண்டி டாஸ்மாக் மதுவிற்பனை. அரசின் சாதனையா? மக்களின் வேதனையா?
இந்த வருட தீபாவளிக்கு ரூ.370 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து, இலக்கையும் தாண்டி ரூ.372 கோடிக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இலக்கை தாண்டிய விற்பனை அரசின் சாதனையா? அல்லது மக்களின் வேதனையா? என்பது குறித்த விவாதங்கள் அரசியல் கட்சியினர்களிடையே நடந்து வருகிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது டாஸ்மாக்கில் மது விற்பனை இலக்கு வைத்து செய்யப்படுகிறது. வழக்கத்தை காட்டிலும் பண்டிகை நேரங்களில் அதிகளவில் மது விற்பனையாவது உண்டு. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் ரூ.372 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கோ ரூ .370 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி ரூ .2 கோடி அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது ஒரு பக்கம் அரசிற்கு வருமானத்தை அதிகரித்திருந்தாலும், மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
இந்த தீபாவளி பண்டிகையின் போது 8ஆம் தேதியில் இருந்தே டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையன்று ரூ .113 கோடிக்கும் 9ஆம் தேதியன்று ரூ .108 கோடிக்கும் தீபாவளி பண்டிகையன்று ரூ .151 கோடி என மொத்தம் ரூ .372 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ .68 கோடி அதிகம் ஆகும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ .304 கோடிக்கு மது விற்பனை நடந்தது.