டாடா ஸெஸ்ட் மற்றும் டாடா போல்ட் – டாடா மோட்டார்ஸ் இப்போதைக்கு இந்த இரண்டு கார்களை நம்பித்தான் இருக்கிறது. மான்ஸா மற்றும் விஸ்டா கார்களின் புதிய மாடல்களான இவை இரண்டும், புத்தம் புதிய கார்களா அல்லது வெறும் மேக்கப் மட்டும்தானா என்பதை பார்ப்போம்.
டாடா ஸெஸ்ட், மான்ஸாவின் காம்பேக்ட் செடான் மாடல். டாடா போல்ட், விஸ்டாவின் புதிய அவதாரம். இரண்டு கார்களையுமே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தினாலும், ஃப்ளாஷ் லைட்டுகளைத் தவிர்த்து இயற்கையான வெளிச்சத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை.
இரண்டு கார்களுமே பார்த்தவுடன் ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், பழைய விஸ்டா சாயல் தெரிகிறது. பழைய விஸ்டாவின் அதே X1 பிளாட்ஃபார்ம்தான் இவற்றிலும். அது ஏன் என்பதைப் பின்னால் பார்ப்போம். இந்த இரண்டு கார்களிலுமே கிட்டத்தட்ட எல்லா பாடி பேனல்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. பழைய விஸ்டா மற்றும் மான்ஸாவில் இருந்த டல்லான தோற்றத்தை மாற்றி, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கார்களை டிஸைன் செய்திருப்பது புரிகிறது. டாடாவின் ‘பிஷீக்ஷீவீக்ஷ்ஷீஸீ ழிமீஜ்t’ வியூகத்தின் அடிப்படையே இதுதான்.
இன்னும் புதிதாக, இன்னும் யூத்தாக!
காரின் வெளிப்புறத் தோற்றத்தில், பழைய மாடல்களை நினைவுபடுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள் டிஸைனர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை இதுதான், ‘கார்களை இன்னும் ஸ்போர்ட்டியாகக் காட்ட வேண்டும். பழைய சேஸிதான் என்றாலும் புத்தம் புதிய காராகத் தெரிய வேண்டும்.’ விஸ்டாவின் பெரிய கேபின், சேஸி போன்றவற்றைத் தாண்டி, சொன்ன வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் டிஸைனர்கள். போல்ட் மற்றும் ஸெஸ்ட்டின் முன்பக்கம் முன்பைவிட இப்போது மிரட்டலாக இருக்கிறது. பம்ப்பர்கள் இப்போது ஷார்ப்பாக இருக்கின்றன. ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலாகவும் இருக்கின்றன. புத்தம் புதிய க்ரில்லின் டிஸைன் பாராட்டப்பட வேண்டிய அம்சம். ஹெட்லைட்டுக்கு உள்ளேயும் பயணிக்கிறது க்ரில்லின் டிஸைன். எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டுகள் ஸெஸ்ட்டில் மட்டும் அளிக்கப்படுகிறது. மேலும், கூடுதலாக ஒரு க்ரோம் பட்டை ஸெஸ்ட்டின் க்ரில்லில் இருக்கிறது. போல்ட் காரின் ஹெட்லைட்டுகளின் உள்பக்கம் கறுப்பு வண்ணத்தில் ஸ்டைலாக இருக்கிறது.
இரண்டு கார்களுமே கொஞ்சம் புஷ்டியான கார்கள் என்பதால், பக்கவாட்டில் கோடுகளைச் சேர்த்து ‘சிக்’கெனக் காட்ட முனைந்திருக்கிறார்கள். ஸெஸ்ட்டின் கீழே ஒரு கறுப்பு வண்ணப் பட்டையும் இருக்கிறது. இரண்டு கார்களின் பின் கதவுகளைத் தாண்டித்தான் பல வித்தியாசங்கள் உள்ளன. போல்ட் காரில் சி பில்லர்களை கறுப்பு வண்ணத்தில் அமைத்ததால், ‘ஃப்ளோட்டிங் ரூஃப்’ எஃபெக்ட் கிடைக்கிறது. அதேபோல, இண்டிகாவின் ட்ரேட் மார்க் டிஸைனுக்குப் பதிலாக, புதிய டிஸைனில் இருக்கிறது போல்ட்-ன் டெயில் லைட்டுகள்.
ஸெஸ்டின் ரூஃப் லைன் தெளிவாகப் பயணித்து, புதிய காம்பேக்ட் டிக்கியை அடைகிறது. தனியாகப் பார்க்கும்போது ஸெஸ்ட் காரின் டிக்கி அழகாகத் தெரிந்தாலும், காரின் ஒட்டுமொத்த விகிதாச்சாரத்துடன் ஒப்பிடும்போது, பொருந்தாமல் இருக்கிறது. ஹோண்டா அமேஸின் டிக்கி டிஸைன் காருடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால், இந்தப் பொருத்தம் ஸெஸ்ட்டில் இல்லை. மேலும், உயரமாகத் தோற்றமளிக்கும் இந்த காருக்கு 16 இஞ்ச் வீலைக் கொடுத்திருப்பது பார்க்க அழகாக இல்லை. போல்ட் கார் விஸ்டாவைவிட நீளம் அதிகமாக இருக்கிறது. ஸெஸ்ட் 3,995 மிமீ நீளம் கொண்டு காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் சேர்கிறது.
சேஸி
இந்த இரண்டு கார்களில் பழைய சேஸியையே பயன்படுத்தியிருந்தாலும், நிறைய முன்னேற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இதில் நிறைய மாற்றங்கள் கார்களின் NVHஐ (சத்தம், அதிர்வுகள் மற்றும் கரடுமுரடுத்தன்மை) குறைப்பதற்குத்தான் செய்யப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, புதிய சப்ஃப்ரேமில், புதிய ஸ்டீயரிங் ரேக்கை அமைத்திருக்கிறார்கள். ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்க இந்த ஏற்பாடு. ஸ்டீயரிங்கும் புத்தம் புதிய ZF எலெக்ட்ரிக் அசிஸ்டட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இதில் ‘பிரஷ்’ இல்லாத மோட்டாரைக் கொடுத்துள்ளதால், ஆன் சென்டர் ஃபீல் சிறப்பாக இருக்குமாம். பழைய விஸ்டாவில் இருந்தது ஹைட்ராலிக் சிஸ்டம்தான். அதிர்வுகளைக் கடத்தும் இடங்களில் கை வைக்காமல், அதிர்வுகள் ஏற்படும் இடங்களிலேயே மாற்றங்கள் செய்துள்ளதால், கேபினுக்குள் சிறப்பான பயண அனுபவம் இருக்கும் என்கிறது டாடா.
காருக்குள் அலுங்கல் குலுங்கல் இல்லாத பயணத்தைத் தருவதற்காக, சஸ்பென்ஷனில் மாற்றங்களையும் செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் போல்ட் 1,080 கிலோ எடையும் ஸெஸ்ட் 1,106 கிலோ எடையும் கொண்டுள்ளது.
இன்ஜின்
போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களில் மிகவும் ஸ்பெஷலான மாற்றம் இன்ஜின்தான். டாடாவின் புத்தம் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், மல்ட்டி பாயின்ட் ஃப்யூல் இன்ஜெக்டட் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின். இது, 84 bhp சக்தியை அளிக்கிறது. பிரியோ மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் கார்களின் சக்தியைவிட இது குறைவாகத் தோன்றினாலும் ரெவோட்ரான் இன்ஜினின் மிகப் பெரிய ப்ளஸ் இதன் 14.3 kgm டார்க். 1,750 ஆர்பிஎம்-லேயே கிடைக்கும் இந்த டார்க், டர்போ சார்ஜரைச் சேர்த்ததால் கிடைத்த நன்மை. மேலும், இதில் 11.2 kgm டார்க் 1,000 ஆர்பிஎம்-ல் கிடைக்கிறது என்பது பெரிய ப்ளஸ்தான். இவ்வளவு குறைந்த ஆர்பிஎம்-ல் சக்தி வெளிப்பட வைப்பதற்காகவே ‘சாஃப்ட்’டான டர்போவைத் தேர்ந்தெடுத்ததாம் டாடா. இதனால், திராட்டில் ரெஸ்பான்ஸும் சீரான பவர் டெலிவரியும் கிடைக்கும்.
இந்த செக்மென்ட்டிலேயே முதன் முறையாக ரெவோட்ரான் இன்ஜினுக்கு ‘ஸ்போர்ட்’ மோடு ஒன்றைச் சேர்த்துள்ளது டாடா நிறுவனம். டேஷ்போர்டில் இருக்கும் இந்த ஸ்போர்ட் பட்டனை அழுத்தினால், இன்ஜின் ECU ஸ்போர்ட்டியான மேப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இதனால், இன்ஜின் இயக்கம் ஸ்போர்ட்டியாக இருக்கும். இந்த இன்ஜினின் முக்கிய நோக்கம் மைலேஜ் மற்றும் சத்தம் குறைவாக இருப்பது. அதனால், கம்பஷன் சத்தத்தை அதிகம் உறிஞ்சிக்கொள்ளும் காஸ்ட் அயர்ன் பிளாக்கையே தேர்ந்தெடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழக்கமான ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின்தான். ஆனால், காரில் 50 கிலோ எடை குறைக்கப் பட்டது, சேஸி மற்றும் பாடியில் மாற்றங்களைச் செய்தது மற்றும் ECU நன்றாக டியூன் செய்தது போன்ற நடவடிக்கைகளால், இந்த இன்ஜினின் குறைந்த ஆர்பிஎம் பெர்ஃபாமென்ஸ் கூடியுள்ளது என்று சொல்கிறது டாடா. போல்ட்டில் இந்த இன்ஜின் ஃபிக்ஸட் ஜியாமெட்ரி டர்போவுடன் அளிக்கப்படுவதால், அதன் சக்தி 74 bhp தான். ஆனால், ஸெஸ்டில் இதே இன்ஜின் வேரியபிள் ஜியாமெட்ரி டர்போவுடன் அளிக்கப்படுவதால், 89 bhp சக்தி கிடைக்கிறது. ஸெஸ்ட் டீசல் காரிலும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை அளிக்க இருக்கிறது டாடா.
இட வசதி
பழைய மான்ஸா மற்றும் விஸ்டா கார்களைப் போலவே போல்ட் மற்றும் ஸெஸ்ட் கார்களில் இடவசதி நன்றாகவே உள்ளது. காரினுள்ளே டேஷ் போர்டு புத்தம் புதியதாக மாற்றப்பட்டுள்ளது. ஃபிட் அண்டு ஃபினிஷில் மிகவும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இதற்கு முன்னால் டாடா கார்களில் இப்படி ஒரு நல்ல தரம் இருந்தது இல்லை. டூயல் டோன் ஸ்டீயரிங், தெளிவான டயல்கள், ஓட்டுனருக்கு வசதியாக இருக்கும் ஏ.சி வென்ட்கள், பியானோ பிளாக் சென்டர் கன்ஸோல், ஆங்காங்கே இருக்கும் க்ரோம் பட்டைகள் என மிகவும் சிறப்பாக இருக்கிறது கேபின். நாம் தொடும், இயக்கும் அனைத்துப் பகுதிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்திருப்பது தெரிகிறது. பழைய விஸ்டாவை ஞாபகப்படுத்தும் இடங்கள் ஹெட்லைட், வைப்பர் ஸ்டாக்கும், டோர் பேடுகளும் தான். ஸெஸ்டை விட, போல்ட்டின் இன்டீரியர் தான் பார்க்க ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இரண்டு கார்களுமே டெட் பெடல் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம், பெரியதாக இருக்கும் ஏ.சி யூனிட்.
முன்பக்க இருக்கைகள் சிறப்பாக இருக்கின்றன. இருக்கைகளில் முன்பைவிட மிகவும் சிரத்தை எடுத்து முன்னேற்றி இருக்கிறார்கள். பின் இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. முன்பைவிட இப்போது கால்களை வசதியாக வைத்துக்கொள்ள முடிகிறது. ஸெஸ்ட் காரின் பின்னிருக்கைக் கோணத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள். போல்ட் காரில் பின்னிருக்கைக் கோணம் மாற்றப்படவில்லை. ஸெஸ்ட்டில் டிக்கி 360 லிட்டர் கொள்ளளவுதான். டாப் எண்ட் வேரியன்ட்டில் ஹர்மான் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் நேவிகேஷன் வசதிகள் உள்ளன. மேலும், ப்ளூ-டூத், எஸ்டி கார்டு ரீடர், யுஎஸ்பி மற்றும் ஆக்ஸ்-இன் வசதிகள் உள்ளன. பார்க்கிங் சென்ஸார் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் வசதியையும் அளித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.