டவர்லைன் தொழிலாளர்கள் சிறைவைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே பணிக்கர்குளத்தை சேர்ந்த பரமன் என்பவர் மின்கோபுர வேலைகள் செய்யும் பணிக்கான ஒப்பந்தங்கள் எடுத்து வேலை செய்து வருகிறார். இவர் பசுவந்தனை அருகே கண்ணக்கட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், முருகன், காசிலிங்கம், ராஜசேகர், விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம், கோவில்பட்டி அருகே செவல்காடு, கட்டாரங்குளம், நெல்லை மாவட்டம் ஆவரங்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பேர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இஞ்சினியரான சூர்யா தலைமையில் காஞ்சிபுரத்தில் வேலை என கூறி அழைத்து சென்றார்.

செந்தில்குமார் உள்ளிட்டவர்களை காஞ்சிபுரத்திற்கு அழைத்து செல்லாமல் சட்டீஸ்கர் மாநிலம் ராயகிரி பகுதியில் குருமாப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு தொழிலாளர்கள் டவர்லைன் வேலையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களை தடுத்த ஒப்பந்தகாரர் பரமன், உங்களுக்கு தேவையான சம்பளத்தை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.

டவர்லைன் பணியின் போது அங்குள்ள ஒருவரிடம் இருந்து தளவாட பொருட்கள் வாடகைக்கு வாங்கி உள்ளனர். அதற்கான வாடகை தொகையை பரமன் கொடுக்கவில்லை. தளவாட பொருட்களின் உரிமையாளர் பணம் கேட்டபோது, தொழிலாளர்களை அங்கு பணயமாக வைத்து விட்டு, பரமன் மட்டும் ஊருக்கு திரும்பினர்.

தாங்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதை அறிந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் செந்தில்குமார் உடனடியாக பரமனை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரை அவதூறாக பேசிய பரமன், கொலை மிரட்டல் விடுத்தார். குருமாப்பள்ளியில் வாடகைக்கு பொருட்கள் அளித்தவரோ எனது பொருட்களுக்கான வாடகை பணம் வந்தால் உங்களை திருப்பி அனுப்புவேன் என்று கூறியுள்ளார்.

இதையறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தொழிலாளி செந்தில்குமாரின் மனைவி பேச்சியம்மாள் கூறுகையில், “சிறைவைக்கப்பட்டுள்ள 21 தொழிலாளர்களும் கடந்த 40 நாட்களாக வேலையின்றியும், சரியான உணவின்றியும் தவித்து வருகின்றனர். தற்போது கடந்த 2 நாட்களாக அந்த நபர் தொழிலாளர்களுக்கு உணவு கூட கொடுக்கவில்லை என தெரியவருகிறது. எனவே சட்டீஸ்கர் மாநிலத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

Leave a Reply