வரிச்சலுகை விவகாரம்: தியேட்டரில் இனி ரூ.120 டிக்கெட்டுக்கு பதில் ரூ.84?
தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கும், தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி பிறமொழி வார்த்தைகள், வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைவாக இருக்கும் படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் வரிச்சலுகை வழங்கப்பட்ட படங்களுக்கும் தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னையில் உள்ள தியேட்டரில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ‘கயல்’ என்ற திரைப்படத்தை பார்க்க குடும்பத்தினருடன் சென்றேன். இந்த படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை வழங்கியுள்ளதால், கேளிக்கை வரியை எங்களிடம் வசூலிக்கக்கூடாது. ஆனால், தியேட்டர் உரிமையாளர் கேளிக்கை வரியுடன் சேர்த்து எங்களிடம் வசூலித்துள்ளார். எனவே, எங்களிடம் கூடுதலாக வசூலித்த 107 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும். வரிச்சலுகை வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.மகாதேவன் அளித்த உத்தரவில், “தமிழ் மொழி மற்றும் கலாசார வளர்ச்சிக்காக திரைப்படங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு வரிச்சலுகை பெறும் திரைப்படங்களில், பிறமொழி வார்த்தைகள், வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைவாக இருக்கவேண்டும். திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களை மனதில் வைத்தே, இதுபோன்ற வரிச்சலுகைகள் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. திரைப்படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டுவதுதான் தியேட்டர் உரிமையாளர்களின் கடமையாகும். அந்த கடமையோடு, வரி விலக்கு சலுகை விதிமுறைகளையும் அவர்கள் அமல்படுத்தவேண்டும்.
வரிச்சலுகை என்பது உரிமை இல்லை. அது ஒரு மானியம் தான். தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்படி, இதுபோன்ற சலுகைகளையும், விதிமுறைகளையும் அரசு பிறப்பிக்க முடியும். எனவே, கேளிக்கை வரிச்சலுகை என்பது திரைப்பட துறைக்கும், தியேட்டர் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, அது ரசிகர்களுக்கு கிடையாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. ஒருவரிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 107 ரூபாயை மனுதாரரிடம் தியேட்டர் நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேபோல, பிறரிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பிக்கொடுக்க முடியாது.
எனவே, கூடுதலாக வசூலித்த தொகையை தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். வரிச்சலுகை தொடர்பாக வணிக வரித்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளில், வரி சலுகை விவரங்கள், டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டு, அதை கேளிக்கை வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றபின்னரே ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அரசு வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கை சட்டத்தின் அடிப்படையில் தவறானது இல்லை. ஆனால், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தெளிவாக இல்லாமல் உள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டிய அவசியமில்லை. அதேநேரம், இந்த வரிச்சலுகை ரசிகர்களுக்குத்தான் சென்றடைய வேண்டும். எனவே, கேளிக்கை வரிச்சலுகை திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சென்றடையும் விதமாக தகுந்த உத்தரவை 4 வாரத்துக்குள் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பிறப்பிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பின்படி இனிமேல் வரிச்சலுகை பெற்ற படங்களுக்கு ரூ.120க்கு பதில் ரூ.84 மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Tax free problem. Chennai HC important judgement