கொலை செய்யப்பட்ட டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஏகாட்டுர் கிராமம், சிப்காட் நிறுவன தொழில்நுட்ப வளாக எல்லையிலுள்ள முட்புதரில், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகள் உமாமகேஸ்வரியின் சடலம் 22.2.2014 அன்று கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த உமாமகேஸ்வரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.