படுக்கை அறை, கழிப்பறை உள்பட ரூ.5 கோடியில் சொகுசு பஸ். தெலுங்கானா முதல்வர் மீது குற்றச்சாட்டு
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் கே. சந்திர சேகர ராவ், அரசு நலத்திட்டங்களை தானேநேரில் ஆய்வு செய்வதற்காக ‘ஹரித ஹாரம் என்ற திட்டத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்த திட்டத்தின்படி முதல்வரே அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து குறைகளை கேட்டறிய உள்ளார். இதற்கான சுற்றுப்பயண திட்டமும், சொகுசு பஸ் ஒன்றும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்காக ரூ. 5 கோடி செலவில் குண்டு துளைக்காத சொகுசு பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் நவீன படுக்கை அறை, கழிப்பறை, ஆலோசனைக்கூடம், பஸ்ஸின் மேற்புறம் நின்று கொண்டு பொதுமக்களை பார்க்கும் வசதி, பஸ்ஸில் இருந்து கொண்டே பொதுக் கூட்டங்களில் பேசும் வசதி போன்றவை வடிவமைக்கப்படுகிறது.
மக்களின் குறைகளை கேட்க செல்லும் முதல்வர் ஒருவருக்கு ரூ.5 கோடியில் சொகுசு பேருந்து தேவையா? என்று காங்கிரஸ் கட்சி இதனைக் கண்டித்துள்ளது. அக்கட்சி எம்.பி. ஜி. ஹனுமந்த ராவ் இதுகுறித்து கூறியபோது, “தேர்தல் பிரசாரத்தின் போது சந்திர சேகர ராவ் சாதாரண பஸ்ஸில் சுற்று பயணம் மேற்கொண்டார். ஆனால் முதல்வரான பின்னர் ரூ. 5 கோடி செலவில் பஸ் தேவையா? இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல். இதற்குப் பதிலாக அந்த பணத்தில் ஏழை மக்களுக்காக பயனுள்ள திட்டங்களுக்கு செலவு செய்யலாம்” என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள தெலங்கானா முதல்வர் அலுவலக அதிகாரிகள், “அரசு நலத்திட்டங்கள் முழுமையாக அமலாக்கப்படுகிறதா? ஏரிகள் தூர்வாரும் திட்டம் சரிவர செயல் படுத்தப்படுகிறதா? என அறிந்து கொள்ளும் வகையில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதன் காரணமாக இனி மாதம் 10 நாட்கள் வரை பஸ்ஸில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், பாதுகாப்பு கருதி, நவீன வசதிகளுடன் இந்த சொகுசு பஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.