ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதமா?
சமீபத்தில் வெளீயான ரிலையன்ஸ் ஜியோ சிம்மிற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் ஜியோ வரவால் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் ஆகியவை பரஸ்பர தொடர்பு வசதியை சரியாக அளிக்கவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவன) பரிந்துரைத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் புரட்சிகரமான என்று கூறப்பட்ட ஜியோ ரிலீஸ் தினத்தில், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தன. பரிசோதனை ரீதியாக முதல் மூன்று மாதங்களுக்கு 4ஜி வேகத்தில் இணையதள வசதி உள்பட அனைத்து அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதால் ஜியோ சிம்-ஐ வாங்க வாடிக்கையாளர்கள் போட்டி போட்டனர் இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பெருமளவு ஜியோவிற்கு மாறிவிட்டனர்.
இந்நிலையில் ஜியோவில் இருந்து அழைப்புகள் சரியாக செல்லவில்லை என்றும் குறிப்பாக ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் எண்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மூன்று நிறுவனங்களும் பரஸ்பர தொடர்பு வசதியை தங்கள் நிறுவனத்துக்கு அளிக்காததே இதற்கு காரணம் என்று ஜியோ குற்றம்சாட்டியதோடு இதுகுறித்து டிராயிடம் ஜியோ நிறுவனம் புகார் அளித்தது.
அந்த புகாரில் “தங்கள் வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேருக்கு ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் எண்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நிறுவனங்கள் பரஸ்பர தொடர்பு வசதியை முறையாக அளிக்காததே இதற்குக் காரணம்’ என்று கூறியிருந்தது. இதனைப் பரிசீலனை செய்த டிராய், மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், தொழில் போட்டி காரணமாக உள்நோக்கத்துடன்தான் பரஸ்பர தொடர்பு வசதியை மூன்று நிறுவனங்களும் அளிக்க மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது நுகர்வோர் விரோதச் செயலாகும். எனவே 21 தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவை அளிக்கும் ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களும், 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் சேவையளிக்கும் ஐடியா நிறுவனத்தும் தலா ஒரு தொலைத்தொடர்பு வட்டத்துக்கு ரூ.50 கோடி என மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.