பீகாரில் முதலமைச்சருக்கு ஏற்பட்ட அவமானம். திடுக்கிடும் தகவல்.

 bihar cmபீகார் முதல்வர் ராம் மஞ்சி, தலித் என்பதால் அவர் கோவிலுக்கு வந்து சென்ற பின்னர் கோவிலை கழுவி சுத்தம் செய்ததாக வெளிவந்துள்ள தகவல்களை அடுத்து அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலித் பிரிவை சேர்ந்த பீகார் மாநில முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி நேற்று முன்தினம் பீகார் தலைநகர் பாட்னா நகரில் உள்ள ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மதுபானி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றதாகவும், அவர் கோவிலில் இருந்து வெளியேறிய உடனேயே, அந்த கோவிலை நிர்வாகத்தினர் கழுவி சுத்தம் செய்ததாகவும் கூறினார்.

சமூகத்தின் ஆழத்தில் பதிந்துள்ள தலித்துகளுக்கு எதிரான ஒரு வெளிப்பாடுதான் இத்தகைய செயல் என்றும் இதுபோன்று சாதி வேறுபாடுடைய ஒருதலைப்பட்சமான போக்கால் சமூகத்தில் பின்தங்கியுள்ள தலித்துக்களை மேம்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய சாதி பாகுபாட்டால் முதல்வரான நானே பாதிக்கப்படும்போது, அப்பாவி பொதுமக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு மாநில முதலமைச்சருக்கு நிகழ்ந்துள்ள இந்த அவமானம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு பல்வேறு சமூக அமைப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இந்தியாவில் தீண்டாமை ஒரு குற்றமாகும். தீண்டாமையால் நாட்டில் உள்ள ஒரு சாதாரண குடிமகன் கூட பாதிக்கக்கூடாது. தான் கோவிலில் இருந்து வெளியேறிய உடனே கோவிலை சுத்தம் செய்தனர் என்று, ஒரு முதல்வரே கூறுவது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? இதைவிட வேறு ஒரு வெட்கக்கேடு இருக்கவே முடியாது. முதல்வர் உடனே போலீசாரை அனுப்பி அந்த பகுதியை சோதனையிட்டு குற்றம் இழைத்தவர்களை சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும்” என்றார்

Leave a Reply