பதவி விலகிய 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஒருசில மாதங்களில் அதிமுகவுடன் தேமுதிக மோதல் போக்கை கடைபிடித்தது. இந்நிலையில் தேமுதிகவை சேர்ந்த எட்டு எம்.எல்.ஏக்கள் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக ஆதரவாளர்களாக மாறி சட்டமன்றத்தில் தனி குழுவாக செயல்பட்டனர்.
இந்த எட்டு எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து நீக்கினால் எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகும் என்ற காரணத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எட்டு எம்.எல்.ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்த எட்டு எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பதவி விலகிய தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை மு.அருண் சுப்பிரமணியன், செ.அருண்பாண்டியன், ஆர்.சாந்தி, ஆர்.சுந்தரராஜன், டி.சுரேஷ்குமார்,க.தமிழழகன், க.பாண்டியராஜன், சி.மைக்கேல் ராயப்பன் ஆகியோர்களும் பாமக எம்.எல்.ஏ. கலையரசு, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர்களும் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அதிமுகவின் உறுப்பினர் அட்டையை கொடுத்தார்.
எட்டு எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் ஏற்கனவே இழந்துவிட்டார் என்பது தெரிந்ததே.