விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. யார் வேண்டாம் எனச் சொன்னாலும், இலவசமாகக் கிடைப்பதால், அது என்ன என்றுதான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 10 என்னும் மேடைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை எடுத்துக் கொண்டால், அடுத்து மைக்ரோசாப்ட் விதிக்கும் எதனையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இருப்பினும், பல வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விண் 10க்கு மாறுவதற்கான காரணங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் 8 மற்றும் 8.1ல் கிடைக்கப்பெற்ற செயலிகளைத் தாங்கி நின்ற “உயிருள்ள ஓடுகள்” (“live tile” UI”) என்னும் யூசர் இண்டர்பேஸ், விண் 10ல், ஸ்டார்ட் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதனை முழுத் திரையில் காணும் வசதியுடன் தரப்பட்டுள்ளது. இந்த வகையில், விண் 8 வழங்கிய நவீன தொடு உணர் திரை நுட்பம் மற்றும் பயனாளர்கள் அதிகம் விரும்பிய ஸ்டார்ட் மெனு, விண் 10ல் தரப்பட்டுள்ளன. இந்த இரண்டு வெவ்வேறான உலகங்களும் விண்டோஸ் பட்டன் மூலம் இணைக்கப்பட்டு, நமக்குப் ”பழக்கமான பயனாளர் இடைமுகத்தினைத்” தருவதாக அமைக்கப்பட்டுள்ளது.
2. இது “டூ இன் ஒன்” (2 in 1) சிஸ்டம் போல உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டச் ஸ்கிரீன், கீ போர்ட் அல்லது மவுஸ் என எதனையும் பயன்படுத்தலாம். உங்கள் சாதனம் டேப்ளட் அல்லது லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் என்ற வகையில் எத்தகையது என்பதைப் பொறுத்து நீங்கள் பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். தொடு திரை எனில், அனைத்தையும் பயன்படுத்தலாம். மிகத் துல்லியமாக இயங்கக் கூடிய டச் பேட் கொண்ட லேப்டாப் எனில், விண்டோஸ் 10 நிறைய டச் பேட் அசைவுகளைத் தருகிறது. இவற்றின் மூலம், நாம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை இயக்கலாம்.
3. உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, விண்டோஸ் 7 லிருந்து நேரடியாக அப்கிரேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8 அல்லது 8.1 சென்று, பின் அதன் பின்னர், விண் 10 சிஸ்டத்தினைப் பதிய வேண்டியதில்லை.
4. விண்டோஸ் 8லிருந்து நேரடியாக, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 8.1 க்குச் சென்று, பின்னரே விண்டோஸ் 10க்குச் செல்ல வேண்டும் என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும்.
5. அவுட்லுக் செயலியில், வேர்ட் தொகுப்பின் அனைத்து திறன்களும் தரப்பட்டுள்ளன. இப்போது டேபிள்களை இணைக்கலாம்; படங்களை இடைச் செருகலாம்; மற்றும் இது போல பல வேர்ட் வேலைகளைச் செயல்படுத்தலாம். மிகவும் மேம்படுத்தப்பட்டு அவுட்லுக் கிடைக்கிறது. இன்றைய வர்த்தக உலகம், மின் அஞ்சல்களை அதிகம் சார்ந்துள்ளதால், அதில் மேம்பாடு தரப்படுவது நல்லது.
6. நாம் பயன்படுத்தும் தன்மைக்கேற்ப, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம்.
7. விண்டோஸ் 10 உடன் வரும் பிரவுசர் மிகவும் அதிகமான பாதுகாப்பு உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும் இணைய தளங்களை எடுத்துத் தருவதற்கான தொழில் நுட்பத்துடன் இந்த பிரவுசர் உள்ளது. அத்துடன் பழைய தொழில் நுட்பத்தில் உருவான தளங்களையும் காட்டுகிறது. அப்ளிகேஷன்களை எடுத்துத் தருகிறது.
8. மொபைல் சாதனங்கள் பயன்பாட்டில் புழங்கப்படும் தொழில் நுட்ப வசதிகள் இதிலும் தரப்பட்டுள்ளன. டேட்டா பாதுகாப்பு, தொலைந்து போன கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாவினைத் தொலைவிலிருந்து அழிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
9. விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குத் தேவையான அனைத்தும், இனி ஒருங்கிணைந்த விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்க இருக்கிறது. விண்டோஸ் ஸ்டோருக்குள்ளாகவே, ஒரு நிறுவனம் தனக்கென ஒரு பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, தங்களுக்கு மட்டுமான அப்ளிகேஷன்களை வைத்துப் பயன்படுத்தலாம்.
10. இறுதியாக ஒன்று. விண்டோஸ் 10 சிஸ்டத்தில் விண்டோஸ் ஹலோ (Windows Hello) என்று ஒரு வசதி தரப்படுகிறது. இதில் பலவகை அடுக்கு பாதுகாப்பு, லாக் இன் செய்திடுகையில் கிடைக்கும். அவை என்ன என்ன என்று இனி தெரியவரும்.
மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக நாம் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.