அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் தொண்டு நிறுவன ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு; 14 பேர் பலி ஒபாமா கடும் கண்டனம்

201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPF

லாஸ்ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் மீது கணவன்–மனைவி நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் ‘இன்லாண்ட் ரீஜினல் சென்டர்’ என்னும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் பாராட்டு விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென்று 2 பேர் நிகழ்ச்சி அரங்கிற்குள் கைத்துப்பாக்கி மற்றும் அதிநவீன தானியங்கி துப்பாக்கியுடன் வந்தனர். அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.

14 பேர் பலி

இதனால் அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடினர். எனினும், வந்தவர்கள் தங்களின் வெறியாட்டத்தை நிறுத்தவில்லை. சரமாரியாக சுட்டுக்கொண்டே இருந்தனர். பின்னர் தாக்குதலை நிறுத்திவிட்டு, இருவரும் ஒரு வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில், சம்பவ இடத்திலேயே 14 பேர் குண்டுபாய்ந்து பலியாயினர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனிடையே, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்கள் வாகனம் பற்றிய அடையாளமும், அவர்கள் செல்லும் பாதையும் போலீசாருக்கு தெரியவந்தது.

போலீசார் பதிலடி

இதனால் அந்த வாகனத்தை போலீசார் சினிமா படக்காட்சி பாணியில் தங்களது வாகனங்களில் வெகுதூரம்வரை வேகமாக துரத்தினர். ஓரிடத்தில் அந்த வாகனத்தில் இருந்த இருவரும் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, வாகனத்தில் இருந்தவர்களில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாகனத்தில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.

கணவன்–மனைவி

கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றியபோது, விருந்து நிகழ்ச்சி தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இளைஞர் என்பதும் இன்னொருவர் பெண் என்பதும் தெரியவந்தது. அவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது இருவரும் கணவன்–மனைவி என்பது தெரியவந்தது.

அந்த பெண்ணின் பெயர், தஸ்பீன் மாலிக்(வயது 27). அவரது கணவரின் பெயர் சயீத் ரிஸ்வான் பாரூக்(28). அமெரிக்க குடியுரிமை பெற்ற சயீத்பாரூக் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவரவில்லை.

சயீத் பாருக்கும், அதே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும், விருந்து நிகழ்ச்சி நடப்பதற்கு சற்று முன்பாக அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிய அவர் தனது மனைவி தஸ்பீனுடன் மீண்டும் அங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீவிரவாத தாக்குதல்?

இந்த சம்பவம் குறித்து, பெர்டினார்டினோ நகர போலீஸ் அதிகாரி ஜரோட் பர்குயான் கூறுகையில், ‘‘தாக்குதல் நடத்திய இருவரும் அதிநவீன கைத்துப்பாக்கிகளை வைத்து இருந்தனர். அவர்கள் தங்களது முகத்தை மறைக்கும் விதமாக கருப்பு நிற உடையை அணிந்து இருந்தனர்’’ என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க புலனாய்வுத்துறையின் துணை இயக்குனர் டேவிட் போவிச் கூறும்போது, இந்த துப்பாக்கி சூட்டில், தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பும் இருக்கலாம் என பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

ஒபாமா கண்டனம்

இந்த துப்பாக்கி சூட்டை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வன்மையாக கண்டித்தார்.

‘‘இது துயரமான ஒரு சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் இந்த உலகில் எங்குமே நடப்பது இல்லை’’ என்று கூறிய அவர் ‘‘அமெரிக்காவில் துப்பாக்கிகளை கையாளுவதற்கான சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்யவேண்டியது மிகவும் அவசியம்’’ என்றும் வலியுறுத்தினார்.

350–வது சம்பவம்

இந்த சம்பவத்தையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அமெரிக்காவில் 350 துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து உள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் நடந்து ஒருவாரமே ஆன நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனக்டிகட் மாகாணத்தின் நியூடவுன் நகரில் உள்ள சாண்டிஹீக் பள்ளிக்கூடத்தில் மர்மநபர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு அமெரிக்காவில் நடந்துள்ள மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும்.

Leave a Reply