தமிழகத்தில் அல் உம்மா இயக்கம் மூலமாகத்தான் தீவிரவாதம் முதல் முதலாக கால் ஊன்றி வளர்ந்தது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த அனைவரும், போலீசாரால் வேட்டையாடப்பட்டு விட்டனர்.
அதன்பிறகு சிறு சிறு இயக்கங்கள் தோன்ற முற்பட்டபோதெல்லாம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, அவற்றை அழித்து விட்டார்கள். கடந்த 2011-ம் ஆண்டில் மீண்டும் தலைமறைவு தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து விட்டனர். இவர்களுக்கு தலைமை வகித்தவர், அபுபக்கர் சித்திக். நாகூரை சேர்ந்த இவர், வெளிநாட்டில் ஆயுத பயிற்சி பெற்றவர்.
வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற சித்திக், 3 முக்கியமான வெடிகுண்டு சம்பவங்களை அரங்கேற்றியவர். 1995-ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் முத்து கிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வெடிகுண்டு பார்சலை தபால் மூலம் அனுப்பியவர் இவர்தான்.
புத்தக வெடிகுண்டு பார்சலை தபால்காரர் கொடுத்தபோது, முத்துகிருஷ்ணன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தங்கம் வெடிகுண்டு பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது குண்டு வெடித்து அவர் பலியாகி விட்டார். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் கிடைத்து விட்டது. இதில் கைதான மேலும் 2 பேர் விடுதலை ஆகிவிட்டார்கள்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அபுபக்கர் சித்திக் இதுவரை பிடிபடவில்லை. அடுத்த கட்டமாக சென்னை சிந்தாரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்த வழக்கிலும், அபுபக்கர் சித்திக் முக்கிய குற்றவாளி ஆவார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஜெகவீரபாண்டியன் என்பவருக்கு புத்தக வெடிகுண்டு பார்சலையும் இவர் தான் அனுப்பினார். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்தவுடன், கத்தார் நாட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் இவர் தப்பியோடி விட்டார்.
சவுதி அரேபியா, மலேசியா போன்ற நாடுகளில் சுற்றி திரிந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் அபுபக்கர் சித்திக் மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டார். இவருக்கு ஆண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.
அமைதியாக ஒதுங்கி இருந்த இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் தலை மறைவு தீவிரவாதிகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் தீவிரவாத வெறியாட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இமாம் அலியின் ஏ.எம்.எப். தீவிரவாத இயக்கத்தை மீண்டும் இவர்கள் தொடங்கினார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், மதுரை அடுத்துள்ள திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு வைத்தனர். நல்ல வேளையாக அந்த வெடிகுண்டை போலீசார் கைப்பற்றி விட்டனர். இதனால், அத்வானி காப்பாற்றப்பட்டார்.
அடுத்தகட்டமாக வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், சேலம் பா.ஜ.க பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை சம்பவத்துக்கு பிறகு, தளபதி அபுபக்கர் சித்திக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்தனர். அவர்களைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீசாரின் வேட்டை தீவிரமாக இருந்தபோதும், தீவிரவாதிகள் 4 பேரும் தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலம், புத்தூரை தங்கள் வசிப்பிடமாக அபுபக்கர் சித்திக் தேர்வு செய்தார். புத்தூரில் 2 வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதில் ஒரு வீட்டில் அபுபக்கர் சித்திக்கும், போலீஸ் பக்ருதீனும் தங்கி இருந்து உள்ளனர்
20 நாட்களுக்கு முன்பு பிலால் மாலிக்கையும், பன்னா இஸ்மாயிலையும் புத்தூரில் இன்னொரு வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளனர். சதி திட்டத்தை தீட்டிக்கொடுப்பது அபுபக்கர் சித்திக், அதை தலைமை தாங்கி நிறைவேற்றும் செயலில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களது சமீபத்திய சதித்திட்டம், திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைப்பதுதான்.
திருப்பதி குடை ஊர்வலத்தின் அமைப்பாளர் இருவரை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தனர். அதற்காகத்தான், போலீஸ் பக்ருதீனை, அபுபக்கர் சித்திக் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைத்தார். சதித்திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை போலீஸ் பக்ருதீனிடம் விளக்கி கூறி விட்டு, அபுபக்கர் சித்திக் திருவல்லிக்கேணியில் இருந்து சென்று விட்டார்.
அவர் சென்னையில் வேறு இடத்தில் பதுங்கி இருந்துகொண்டு சதித்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை விளக்கி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பதி குடை ஊர்வலம் சென்னை சூளை வழியாக வரும்போது, அதில் நாச வேலையை உண்டாக்கும் திட்டத்துடன் போலீஸ் பக்ருதீன் பதுங்கி இருந்தார். அவரோடு அபுபக்கர் சித்திக்கும் இருந்ததாக ஒரு தகவல் உள்ளது.
போலீஸ் பக்ருதீனை சூளையில் வைத்து போலீசார் பிடித்தபோது, அங்கிருந்த அபுபக்கர் சித்திக் தப்பியோடி விட்டதாகவும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அபுபக்கர் சித்திக்கின் தற்போதைய தோற்றம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. அவரது சமீபத்திய புகைப்படம் கூட இல்லை. அவர் பிடிப்பட்டால்தான் இந்த வேட்டை முழுமை அடைந்து வெற்றி பெற்றதாக சொல்ல முடியும்.
அபுபக்கர் சித்திக் அடுத்த கட்டமாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இவர்களது அமைப்பில் 100 பேரை உறுப்பினர்களாக சேர்த்து பயிற்சி கொடுக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
இவர்களது இலக்கில் உள்ள இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இலக்கு இந்து முன்னணி, பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய தலைவர்கள்தான். அதே நேரம் நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு இருப்பதால், அவரை தீர்த்துக்கட்டும் இலக்கு இவர்களிடம் இல்லை.
தலைவர்களை குண்டு வைத்து கொல்வதற்கு பதில் அரிவாளால் வெட்டிக்கொல்லும் திட்டத்தையே இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்து முன்னணி, பா.ஜ.க. அமைப்பை சீர்குலைத்த பிறகு, அடுத்த கட்டமாக சென்னையில் பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்துவரும் அபுபக்கர் சித்திகை பிடிப்பதில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.