வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற தடை. தாய்லாந்தில் புதிய மசோதா தாக்கல்.

rent mother
வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெற்றுத் தருவதற்குத் தடை விதிக்கும் மசோதா நேற்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இனிமேல் யாராவது வாடகைத்தாயாக செயல்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

உலகெங்கிலும் குழந்தை இல்லாத தம்பதிகள் தாய்லாந்து நாட்டிற்கு வந்து பணம் கொடுத்து வாடகைத்தாயை அமர்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை தாய்லாந்தில் அதிகமாக இருந்தது. குழந்தை பெற்றுத் தரும் தொழிற்சாலையாக தாய்லாந்தை பெண்களை உலக நாடுகள் கருதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வல்லோப் துங்கானானுராக் வியாழக்கிழமை கூறியதாவது: தாய்லாந்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு ஆஸ்திரேலிய தம்பதி, அந்தக் குழந்தை மூளைத்திறன் குன்றியதாக இருந்ததால் அந்த குழந்தையை வாடகைத் தாயிடமே விட்டுச் சென்ற செய்தி வெளியானபோது தாய்லாந்து மட்டுமின்றி உலகமே அதிர்ச்சி அடைந்தது. இதேபோல்  தாய்லாந்து வாடகைத் தாய்களைப் பயன்படுத்தி ஜப்பானியர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் 15 குழந்தைகளைப் பெற்றுள்ள செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓரினச்சேர்கைத் தம்பதி, தாய்லாந்தில் வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையை தகுந்த ஆவணங்களில்லாமல் அந்த நாட்டை விட்டு எடுத்துச் செல்ல முயன்றபோது தடுக்கப்பட்ட செய்தியும் வெளியாகியது.

இதுபோன்ற செய்திகள் தாய்லாந்து நாட்டின் மரியாதையை கெடுத்து வந்ததாகவும், இதுகுறித்து உடனடியாக அமைச்சரவை கூடி இந்த மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தாய்லாந்து மருத்துவமனைகளில் வாடகைத் தாய் முறையில் குழந்தைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஏராளமான வெளிநாட்டவர்கள் கலக்கமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply