தலைவனாக விரும்பினால்…?

k_2593477f

இயேசுவின் இறுதி நாட்கள் அவை. செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்கிறது. கலிலேயாவில் பணியாற்றியபின் இயேசு எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். உடன் அவரது பன்னிரெண்டு சீடர்களும் தொடர்ந்து பயணம் செய்தனர்.

பயண வழியில் மக்களுக்கும் சீடர்களுக்கும் போதிக்கிறார்; புதுமைகள் நிகழ்த்துகிறார்; தமது இறுதிநாட்கள் நெருங்கிவிட்டதையும், துன்பங்கள் அனுபவித்து இறுதியில் கொடூரமான சிலுவைச் சாவுக்குத் தாம் ஆளாகப் போவதையும் ஒருமுறையல்ல, மூன்று முறை முன்னறிவிக்கிறார். அவர் இப்படி முன்னறிப்பதை, மாற்கு புத்தகம் 10 அதிகாரம் 32 முதல் 34 வரையான வசனங்களில் நாம் காணமுடியும்.

தனது தந்தையும் பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலனம் செய்யும் கடவுளுமாகிய பரலோகத் தந்தையின் சித்தத்தின்படி, தாம் எதிர்கொள்ளப்போகிற கொடூரமான துன்ப, துயரங்கள் பற்றிப் பேசினார் இயேசு. இயேசுவின் புகழையும் அவரைக் காண வரும் மக்கள் திரளையும் கண்டு சீடர்களுக்கு கவனம் சிதறியது.

இயேசு மூலம் தங்களுக்குக் கிடைக்கப்போகும் பதவி, அந்தஸ்து, புகழ், அதிகாரம் போன்றவற்றைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். இயேசுவின் சீடர்களில் யாக்கோபுவும், யோவானும் சகோதரர்கள். பன்னிரெண்டு பேரில் இயேசுவிடம் தங்களது இடம் எது என இவர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். தங்களது இடத்தை உறுதிசெய்யும்படியும் அவர்கள் இயேசுவிடம் வலியுறுத்தினார்கள். அவர்களது எதிர்பார்ப்புக்கு இயேசு என்ன பதிலுரைத்தார்?

வலப்புறமும் இடப்புறமும்

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “ ஆண்டவரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டுகோள் வைத்தனர். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்ற பத்து சீடர்களும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை தன்னருகே அழைத்து, “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.

ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் முதலில் உங்களுக்குத் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யாக்கோபுவும் யோவானும் மட்டும் இயேசுவிடம் பிரத்யேகச் சலுகை கேட்டது சரியல்ல என்ற எண்ணம்தான் இயேசுவின் மற்ற பத்து சீடர்களுக்கும் கூட இருந்தது. அவர்கள் கோபப்பட்டனர்.

பணிபுரியவே வந்தேன்

இயேசு அறிமுகப்படுத்திய பணி செய்யும் தலைமைப் பண்புதான் இன்று வரை உலக வளர்ச்சிக்கும், அமைதிக்கும் தேவையானதாக இருக்கிறது. தலைவர்கள் பிறரை அடக்கி, ஆள்பவர்கள் அல்ல, மாறாக பிறருக்குப் பணி செய்து, தம்மையே தியாகம் செய்பவர்கள் என்னும் இயேசுவின் பார்வை இன்றும் புதிதாகவும் தேவையானதாகவும் இருக்கிறது.

இயேசு போதனையோடு மட்டும் நின்றுவிடாமல் அதை வாழ்ந்து காட்டினார். தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி, தொண்டே உலகின் உயரிய தலைமைப் பண்பு என்பதை தன் வாழ்வு நெடுகிலும் உணர்த்திச் சென்றார்.

இதுவே இயேசு வலியுறுத்திய தலைமைப் பண்பு. இதுவே இன்றைக்கும் என்றைக்குமான தேவை. “பணிபுரியவே வந்தேன்” என்று மொழிந்த இயேசுவின் வார்த்தைகள் நம்மை அர்த்தமுள்ள தலைவராக உயர்த்தட்டும்.

Leave a Reply