அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கமா? கவர்னரை சந்தித்த தம்பிதுரை-ஜெயகுமார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்த ஒருசில மணி நேரங்களில் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை அதிமுகவின் சீனியர் தலைவர்களான தம்பித்துரை மற்றும் ஜெயகுமார் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்பாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கவர்னரிடம் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த தம்பிதுரை எம்பி, ‘மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், அரசியல் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை” என்றார்.
ஓபிஎஸ் -இபிஎஸ் இணைப்பு குறித்து இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் மிகவிரைவில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.