தங்கமகன்’ திரைவிமர்சனம். தகரம் கலந்த தங்கம்
வேலையில்லா பட்டதாரி’ வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்த்த தனுஷூக்கு மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தங்கமகன்’ திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்
பாசமான பெற்றோர்கள் கே.எஸ்.ரவிகுமார்-ராதிகா, நண்பன் சதீஷ், உறவினர் அரவிந்த் என ஜாலியாக இருக்கும் தனுஷூக்கு திடீரென எமிஜாக்சன் மீது காதல் வருகிறது. காதல் வந்ததும் உறவினர் அரவிந்தை கழட்டி விடும் தனுஷ், எமிஜாக்சனை விரட்டி விரட்டி காதலித்து அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் தனுஷ் தாய்-தந்தையை விட்டு பிரிந்து வரவேண்டும் என எமி கண்டிஷன் போட இதனால் காதல் பிரேக் அப் ஆகிறது. அதுமட்டுமின்றி தனுஷின் உறவினரான அரவிந்தையே எமிஜாக்சன் திருமணம் செய்கிறார்.
இதனால் சோகத்துடன் இருக்கும் தனுஷூக்கு அவரது பெற்றோர்கள் சமந்தாவை திருமணம் செய்து வைக்கின்றனர். இந்நிலையில் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்யும் கே.எஸ்.ரவிகுமாருக்கு தனது மேலதிகாரி ஜெயப்பிரகாஷால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. எமிஜாக்சனின் கணவரான அரவிந்தும் கே.எஸ்.ரவிகுமாருக்கு துரோகம் செய்கிறார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் யார்? என்பதை கண்டுபிடிக்க தனுஷ் களமிறங்குகிறார். அதை கண்டுபிடித்து தனது தந்தையின் கறையை துடைத்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
இந்த படத்தில் முதல்பாதியில் எமிஜாக்சனுடன் ஜாலியாக வலம் வருகிறார் தனுஷ். சதீஷுடன் காமெடி, பெற்றோர்களுடன் பாசம், எமியுடன் காதல் என படுஜாலியான தனுஷ், அப்படியே இரண்டாவது பாதியில் முற்றிலும் மாறிவிடுகிறார். சமந்தாவுக்கு பொறுப்பான கணவராகவும், தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் மகனாகவும் நடிப்பில் ஜொலிக்கின்றார்.
முதல் பாதியின் சுறுசுறுப்புக்கு தனுஷை அடுத்து பெரிய காரணம் எமிஜாக்சன். முகத்தில் அயல்நாட்டு வாடை தெரிவதால் கதையுடன் ஒன்ற முடியாவிட்டாலும் தனுஷுடன் காதல், கணவர் அரவிந்துடன் மோதல், என அவரது பங்களிப்பை சரியாக செய்துள்ளார்.
அமைதியான மனைவியாக, மாமனார் மாமியாரிடம் பாசமாக என அழுத்தமான வேடம் சமந்தாவுக்கு. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? என்று அதிசயமாக பார்க்க வைக்கும் கேரக்டர். சமந்தாவுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல பெயரை வாங்கித்தரும் என்பதில் சந்தேகமில்லை.
தனுஷ், அனிருத், சமந்தா, சதீஷ், எமிஜாக்சன் என அனைவரிடமும் சரியாக வேலை வாங்கிய வேல்ராஜ், தன்னுடைய வேலையை சரியாக பார்க்காததால், படத்தின் இரண்டாம் பாகம் சீரியலைவிட மோசமாக உள்ளது. எமிஜாக்சனின் கணவன் அரவிந்தை வில்லனாக்கி, பின்னர் திடீரென அவரை நல்லவராக்கி கதையை நகர்த்த முடியாமல் திணறியிருப்பதை பார்க்க முடிகிறது. ஜெயப்பிரகாஷ்தான் மெயின் வில்லன் என்பதை சஸ்பென்ஸோடு சொல்வதாக இயக்குனர் நினைத்து கொண்டாலும், இந்த சஸ்பென்ஸை எல்.கே.ஜி குழந்தை கூட கண்டுபிடித்துவிடும் என்பதுதான் உண்மை. ‘விஐபி படத்தில் இருந்த வேகம், விறுவிறுப்பு, பளார் வசனம் என எதையுமே இந்த படத்தில் பார்க்க முடியவில்லை. முதல்பாதி காமெடியாக இருந்தாலும் கதையே இரண்டாவது பாதியில்தான் ஆரம்பமாகிறது. ஆனால் கதை ஆரம்பித்தவுடன் படத்தின் வேகம் குறைகிறது.
அனிருத்தின் இசையில் ‘என்ன சொல்ல’ என்ற பாடல் மட்டும் கேட்கும்படி உள்ளது. ஒரு அமைதியான குடும்பப்படத்திற்கு இசையமைத்த அனுபவம் இல்லாததால் அனிருத் ஏனோதானோ என்று பின்னணி இசையை அமைத்துள்ளார். கடைசி அரை மணி நேரத்தில் மட்டும் தனுஷ் ரசிகர்களை தெறிக்க வைக்கிறார் அனிருத்
இரண்டாவது பாதி மிக மெள்ள நகர்வதற்கு படத்தொகுப்பாளர் ராஜேஷ்குமாரும் ஒரு காரணம். குமரனின் ஒளிப்பதிவில் எந்த குறையும் இல்லை.
பணம் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக மாற்றும் என்ற மெசேஜை சொல்ல முயற்சி செய்திருக்கும் இயக்குனர் அழுத்தமான காட்சிகளை வைக்காததால் ஆடியன்ஸ்கள்தான் பைத்தியக்காரர்களாக திரும்புகின்றனர்.
மொத்தத்தில் தங்கமகன்’ முதல் பாதி தங்கம், இரண்டாவது பாதி தகரம்