இயக்குனர் தங்கர்பச்சான் புதிய கட்சி ஆரம்பிக்கின்றாரா? தாங்குமா தமிழகம்

இயக்குனர் தங்கர்பச்சான் புதிய கட்சி ஆரம்பிக்கின்றாரா? தாங்குமா தமிழகம்

தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாத அளவில் நாள்தோறும் புதிய கட்சிகள் தோன்றி வருகின்றன. ஒரே கட்சி பல கட்சிகளாக உடைந்தும், புதிது புதிதாகவும் கட்சிகள் தோன்றி வருகிறது. இன்னும் எத்தனை கட்சிகள் உருவாகுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தனது ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பேச்சிலும், செயல்பாடுகளிலும் கண்டு கொண்டிருப்பீர்கள்!
வெறும் திரைப்படக்கலைஞனாக மட்டும் செயல்பட்டிருந்தால், பணம் மட்டுமேதான் எனது தேவை என நினைத்திருந்தால் பணத்தை சேர்த்துக்கொண்டு பலரைப்போல் நானும் என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், எது நடந்தாலும் எனக்கென்ன என ஒதுங்கியிருப்பேன். என் தமிழ் உணர்வுதான் என்னை எழுத்தாளனாகவும், சமூகப் போராளியாகவும் மாற்றியிருக்கிறது. என்னைப்பற்றியும்,என் குடும்பத்தைப்பற்றியும் நினைப்பதைவிட எதிர்கால தமிழ்ச்சமூகத்தைக் குறித்த அக்கறையும், கவலையுமே என்னை ஒவ்வொரு மணித்துளியும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

சமூகத்தின் அரணாக இருக்கின்ற சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகத்துறை என அனைத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துக்கொண்டு வருகிறது. தங்களுக்கு பாதுகாப்பு இனி தாங்கள் மட்டுமே என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, நம் இளைஞர்கள் அரசியலை உற்று நோக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் உலகமே வியந்துப் பார்த்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். நேர்மையான ஊடகங்கள் அருகி வரும் வேளையில் மக்களின் மனக்கொதிப்பு சமூக வலைதளங்களின் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன. மாணவர்கள் அரசியல் பேசத் தொடங்கி விட்டார்கள். நம் கல்வித்திட்டம் கற்றுக்கொடுக்காத அரசியலை, வீதியில் இறங்கி மக்கள் போராட்டத்தின் மூலம், கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இனி போராட்டமே வாழ்க்கை! அதன் மூலமே தேவைகளையும், நீதியையும் பெறவேண்டியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு விட்டார்கள்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகால அனுபவத்தில் திரைப்படம், எழுத்து, பொதுவாழ்க்கை, மக்களுக்கான போராட்டம் என இவற்றை எல்லாம் கடந்துவந்த பாதையில் நான் கற்றுக்கொண்டதைத்தான் தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண்டவர்களும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன்.

தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூரையாடியவர்களின் எண்ணிக்கையை விடவும் சூரையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்தத் தவறியதுதான். அதனால்தான் அப்படிப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அரசியலைப் பிழைப்பாக்கி நம் வாழ்வை அழித்தொழிக்க களம் இறங்குகிறார்கள். வாக்குகளை விலைக்கு விற்காமல் சரியாக பயன்படுத்தியிருந்தால் எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருந்திருக்கும். திருடர்களிடமும், குற்றவாளிகளிடமும் நாட்டைக்கொடுத்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நின்று புலம்பி கொண்டிருக்க மாட்டோம்!

இப்படி கண்ணுக்கெதிரே விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அனைவருக்கும் உணவை கொடுத்துவிட்டு பொங்கலைக் கொண்டாட ஒருகிலோ பச்சரிசிக்காக நாள் முழுக்க விவசாயிகள் வரிசையில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் பிள்ளைகள் எந்தத் தொழிலை செய்தாலும் செய்யட்டும், விவசாயம் மட்டும் செய்யக்கூடாது என அனைத்து பெற்றோர்களும் முடிவெடுத்துவிட்டதால் எல்லோரும் விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை இனி விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. படித்து முடித்து வேலை வேண்டி பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கின்ற ஒன்றேகால் கோடி இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நம் சிக்கல்களையும், தேவைகளையும் தீர்த்து கொள்கிற ஆட்சியை நம் இளைஞர்களே உருவாக்கிவிட முடியும்.

அது அமைய வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியைத் தந்து நேர்மையானவர்களை அடையாளம் காண்பித்து குழப்பத்திலிருக்கும் மக்களுக்கு புரிய வைத்து புதிய அரசியலை உருவாக்க வேண்டியத் தேவை ஒவ்வொரு சமூகத்தைப்பற்றிய அக்கறையுடையவர்களுக்கும் இருக்கிறது. நாம் அனைவருமே இதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கருத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இனியாவது இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்டு நம் மக்களுக்கு வாக்குரிமையின் வலிமையை உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனி ‘மக்கள் பணி’ என்பது தங்கர் பச்சான் எனும் தனிப்பட்ட பெயர் கொண்டு இல்லாமல் ஒரு இயக்கத்தின் பெயர் கொண்டு செயல்பட வேண்டும்; அதற்கான பணியில் உங்களுடன் நாங்களும் இணைத்துக்கொள்கிறோம் என என் மீது பற்றுள்ள பற்றாளர்களும், இளைஞர்களும் வற்புறுத்துகிறார்கள். அதன் அவசியத்தை நான் புரிந்துகொண்டதன் காரணமாக அதற்கான இசைவை இப்போது அளித்திருக்கிறேன்.

இந்த இயக்கம், இளைஞர்களாகிய உங்களுக்கானது. இதனை உருவாக்கி உங்களிடமே கொடுத்து விட்டு உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட விரும்புகிறேன். அந்த இயக்கத்திற்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாணவர்களாகிய, இளைஞர்களாகிய, நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
முக்கியமாக, பொருளீட்ட வேண்டி எல்லைகளைக் கடந்தும், கடல் கடந்தும் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு தமிழ் நிலத்தையும், இம்மக்களையும் பற்றி அக்கறையும், கவலையும் கொண்டிருக்கின்ற நம் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply