முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கத்தின் நன்றி அறிக்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்றைய சட்டமன்ற கூட்டத்தின் விவாதத்தின்போது ‘விரைவில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவின் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு கோலிவுட் திரையுலகினர் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் தனது டுவிட்டரில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில் ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு நன்றி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
தமிழக வரலாற்றில் பாரம்பரியமிக்க சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் ‘டாக்டர் அம்மா’ அவர்கள் இன்று கலைத்துறையை சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப்பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இந்த விருதுகள் மூலம் பல கலைஞர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள ஒரு உந்து சக்தியாக இது இருக்கும்.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா தங்கள் பொற்கரங்களால் நிகழவிருக்கும் இதே காலக்கட்டத்தில், இந்த விருது எங்களை போன்ற கலைஞர்களுக்கு இரட்டிப்பு சந்தோசமாக இருக்கிறது.
‘மாண்புமிகு ‘தமிழ்நாட்டு முதலமைச்சர்’ டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.