கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழிப் பெருந்திருவிழா சனிக்கிழமை (டிச. 27) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, காலை 7.45 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 9.15 மணிக்கு திருமுறைப் பேரவை ஊர்வலம், திருவெம்பாவை பாராயணம், மாலை 5 மணிக்கு ஆர்.எஸ். அரிகரன் குழுவினரின் மங்கல இசை, 6 மணிக்கு புல்லாங்குழல் இசை, இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகின்றன.
3ஆம் திருவிழாவான டிச. 29ஆம் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதியுலா, மாலை 5, இரவு 7 மணிக்கு சமயச் சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு வீரமணி ராஜு குழுவினரின் பக்தி மெல்லிசை நடைபெறும்.
இரவு 10.30 மணிக்கு சுவாமி கற்பகவிருட்ச வாகனத்தில் வீதியுலா நடைபெறும். அப்போது கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் பெற்றோரைச் சந்திக்கும் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
5ஆம் திருவிழாவன்று அதிகாலை 5 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் பஞ்சமூர்த்தி தரிசனத்துக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், காலை 6 மணிக்கு கோயில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளைக் கருடன் வலம் வருதல், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெறும்.
7ஆம் திருவிழாவான ஜன. 2ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி வீதியுலா வருதலும் மாலை 4.30 மணிக்கு நடராஜ சுவாமிக்கு திருச்சாந்து சார்த்துதலும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பின்னணிப் பாடகர் மனோ மற்றும் சென்னை கணேஷ் கிருபா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் சி.என். ராஜதுரை செய்துள்ளார். இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
தேர்த் திருவிழா: விழாவின் 9ஆம் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதியுலா வருதல் நடைபெறும். காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கப்படுகிறது. இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 12 மணிக்கு சப்தவர்ணக் காட்சி நடைபெறும்.
10ஆம் திருவிழாவான ஜன. 5ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜ மூர்த்தி வீதியுலா வருதல், இரவு 9 மணிக்கு திருஆராட்டு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருக்கோயில்களின் இணை ஆணையர் இரா. ஞானசேகர் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.