மணமகள் தேவை’ விளம்பரம் கொடுத்த 62 வயது பெரியவர் கடத்தல். சென்னையில் பரபரப்பு

kidnapசெய்தித்தாளில் வெளியான ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை பார்த்து அதில் விளம்பரம் கொடுத்த ஒருவரை கடத்தி சென்று பணம் பறிக்க முயன்ற கும்பல் ஒன்றை போலீஸார் வலைவீசி  தேடிவருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் அருகே கீழ்க்கட்டளை என்ற பகுதியை சேர்ந்தவர் 62 வயது ராமமூர்த்தி என்பவர் மனைவி பிரிந்து வாழ்வதால் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்து பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். இந்த விளம்பரத்தை பார்த்ததாக ஒரு பெண்ணிடம் இருந்து அவருக்கு போன் அழைப்பு வந்தது. தனது பெயர் வைஷ்ணவி என்றும் நேரில் சந்திக்க விரும்புவதாகவும் கூறி ராமமூர்த்தியை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அந்த பெண் வரவழைத்தார்.

பின்னர் ராமமூர்த்தியை நேரில் சந்தித்த அந்த பெண், காரில் தன்னுடைய உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களிடம் பேசலாம் என்று அழைத்து சென்றார். காரில் ராமமூர்த்தி ஏறியதும் கார் வேகமாக கிளம்பி சென்றது. அப்போதுதான் தான் கடத்தப்பட்டோம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

பின்னர் ராமமூர்த்தியை தனியறையில் அடைத்து வைத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 லட்சம் எடுத்துத் தரும்படி மிரட்டி நாள் முழுவதும் சித்ரவதை செய்துள்ளனர். பணம் எடுத்துத் தருவதாக அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கிக்கு அவரை நேற்று காலை அழைத்து வந்தனர்.

வங்கியில் பணம் எடுத்து வருவதாக உள்ளே சென்ற ராமமூர்த்தி வங்கி அதிகாரிகளிடம் நடந்ததை கூறியுள்ளார். வங்கி அதிகாரிகள் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீஸார் வருவதற்குள் கடத்தல் கும்பல் தப்பித்து ஓடிவிட்டது. அந்த பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Leave a Reply