ஆச்சி மசாலாவுக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆச்சி மசாலா கடந்த பலவருடங்களாக சமையலுக்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிறுவனம் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு இந்நிறுவனம் ‘ஆச்சி’ என்ற டிரேட் மார்க் உரிமத்தை பெற்றுவிட்டது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டு ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபுட்ஸ் என்னும் பெயரில் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2013ஆம் ஆண்டு ஆச்சி ஆப்பக்கடை என்னும் உணவகத்தை கலிபோர்னியாவில் ராஜூ காளிதாஸ் என்பவர் தொடங்கியுள்ளார்..
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆச்சி மசாலா நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆச்சி என்பது தங்களின் உலகளாவிய டிரேட் மார்க் என்றும் இந்த பெயரில் வேறொருவர் கடைதிறக்க சட்டப்படி உரிமை இல்லை என்றும் வாதாடியது.
ஆனால் ஆச்சி ஆப்பக்கடை தரப்பில் வாதாடியபோது, ‘ஆச்சி என்பது பொதுவான பெயர், மசாலா பொருட்களும் உணவும் வேறுவேறு, ஆச்சி என்னும் பெயருடன் ஆப்பக்கடை சேர்ந்திருப்பதால், ஆச்சி மசாலாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று வாதாடியது. ஆனால் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆச்சி ஆப்பக்கடை என்னும் பெயருக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.