வாய்ப்புண், சிறுநீர்த் தடைக்கு சிறந்த மருந்து மணத்தக்காளிக் கீரை

spinach

மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒருவகைச் செடி. இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல இருப்பதால் இதனை ‘மிளகு தக்காளி’ என்றும் கூறுவர்.

மணத்தக்காளியின் காய், மார்பில் சேரும் கோழை, இருமல் மற்றும் இளைப்பை நீக்கும். வாயில் ஏற்படும் புண் மற்றும் உடல் சூட்டைப் போக்கும். இந்தக் கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன. மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது.

வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த கீரையை ஒரு கைபிடி அளவு நன்றாக மென்று சாப்பிடலாம். இதை உணவிலும் தினம் சமைத்து உண்ணலாம். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும், மலமிளக்கும் தன்மையும்  இந்தக் கீரைக்கு உண்டு. ரத்தசோகை நோய் காரணமாக சிலருக்கு உடல், கை, கால்களில் வீக்கம் ஏற்படும்.

அவர்கள் இந்தக் கீரையை சமையல் செய்து சாப்பிட இரும்புச் சத்து அதிகரிக்கும், வீக்கம் குறையும். மணத்தக்காளி கீரை சிறுநீரைப் பெருக்கும் இயல்புடையது. இதன் இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.

மணத்தக்காளி இலை, மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்க உதவுகிறது. நரம்புகள் தூண்டப்படுவதால் சிலருக்கு கை, கால்களில் எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படும், தூக்கமின்மை ஏற்படும். இப்பிரச்சினை உள்ளவர்கள் தினமும் மணத்தக்காளி இலையை சமைத்து உண்டு வரலாம். அக்கி நோய்க்கு மணத்தக்காளி இலையை அரைத்துப் பூசலாம். மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும், கோழையை அகற்றும்.

இதற்கு மலத்தை இளக்கும் தன்மையுள்ளதால், மூல நோய் உள்ளவர்களும் இதை உணவில் அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளிப்பழம் அதிக சத்துள்ளது. காச நோயாளிகளுக்கு கொடுக்கலாம். தாதுக்களுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் சூடு காரணமாக வாய்ப்புண், சிறுநீர்த் தடை போன்றவற்றுக்கு சிறந்த மருந்து மணத்தக்காளிக் கீரை. இக்கீரையை தவறாது உணவில் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply