உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கி வரும் சீனப்பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை அருகிலுள்ள கிராம மக்கள் திருடி விற்பனை செய்து வருவாய் பார்ப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அங்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சி கடும் அடைய செய்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் 13,171 மைல்கள் நீளமுடையது. எவ்வித இடைவெளியும் இன்றி காணப்படும் இந்த பெருஞ்சுவர் சீனாவின் சான்காய்குவான் என்ற பகுதியில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை நீண்ட நெடிய தூரம் கொண்டது. இந்த சுவரை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அதன் பிரமிப்பை பார்த்து அதிசயித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக பாரம்பரியம் கொண்ட இந்த சுவருக்கு தற்போது ஒருசில உள்ளூர்வாசிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனப்பெருஞ்சுவரை ஒட்டியுள்ள உள்ளூர் கிராமவாசிகள் சிலர், சீனப்பெருஞ்சுவரில் உள்ள மதிப்பு மிகுந்த அரியவகை செங்கற்களை வீடு கட்டுவதற்காக உருவி திருடிச் சென்று விடுவதாகவும், ஒருசிலர் திருடி விற்பனை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சீனப்பெருஞ்சுவர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு செங்கல்லை 30 யுவானுக்கு விற்பனை செய்யும் உள்ளூர்வாசிகள் இதையொரு ரெகுலரான தொழிலாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து புகார்கள் எழுந்தவுடன் செங்கற்களை திருடுவோர் மீது 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்படும் என சீன அரசு எச்சரித்துள்ளது. அரசின் எச்சரிக்கைக்கு பின்னர் சுவரில் இருந்து செங்கற்கள் திருடு போவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் கலாச்சார, கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றி வரும் சீனப்பெருஞ்சுவருக்கு வந்திருக்கும் இந்த சோதனை சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.