மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த். அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?
அனைவரது ஊகங்களையும் மீறி நேற்று மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்த அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் வரவை எதிர்பார்பார்த்து காத்திருந்த திமுக மற்றும் பாஜகவிற்கு இது பெருத்த ஏமாற்றமாக இருந்தபோதிலும் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மீண்டும் அதிமுக அரசு அமைவது உறுதி என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்தின் இந்த முடிவு குறித்து தலைவர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை பார்ப்போம்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. எங்களுடைய தேர்தல் பணிகளை நாங்கள் தொடர்கிறோம். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
கடந்த மக்களவைத் தேர்தலைப் போல அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டணி அமைக்க கடைசி வரை முயற்சித்தோம். ஆனால், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது அவர்களது சொந்த முடிவாகும். அவர்கள் தங்களுக்கு ஏதுவான முடிவை எடுத்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் தமாகாவின் கூட்டணி அறிவிக்கப்படும்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:
மக்கள் நலக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்று வைகோ தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏன் அறிவித்துள்ளனர்? 90 வயதை கடந்த கருணாநிதி, 68 வயதை கடந்த ஜெயலலிதா, மக்கள் நலனில் அக்கறை இல்லாத விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பாமகவுக்கு வெற்றி உறுதியாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸை 1967-ல் அண்ணா ஆட்சியிலிருந்து இறக்கினார். அதைப் போலவே, திமுக, அதிமுகவை எங்கள் அணி வீழ்த்தும். மக்கள் நலக் கூட்டணி அதிமுகவுக்கு சாதகமானது என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அதிமுகவை கடுமையாக எதிர்க்கிற தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. திமுக, அதிமுகவை வெற்றி பெறச் செய்யவே இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. எனவே, இதை மக்கள் நலக் கூட்டணி என்று சொல்ல முடியாது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத கூட்டணி என்றே சொல்ல முடியும். தே.ஜ கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். முதல்வராக முடியாது என்றாலும் முதல்வர் வேட்பாளராக உள்ள விஜயகாந்துக்கு எனது வாழ்த்துகள்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்:
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றதன் மூலம், மாற்று அரசியல் என்று பேசுவதற்கான தகுதியை ம.ந.கூட்டணியினர் இழந்துவிட்டனர். அதிமுகவில் அரங்கேற்றப்படும் தனி மனிதர் துதி, ஒற்றை நபரை மையமாகக் கொண்ட அரசியல், ஆடம்பர ஆரவார கட்- அவுட் கலாச்சாரம், திமுகவில் உள்ள குடும்ப அரசியல் என அனைத்தையும் தேமுதிக பின்பற்றுகிறது. பவுர்ணமி நாளில் தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் இணைந்துள்ளன. பவுர்ணமிக்கு அடுத்த நாள் தேய்பிறை, இக்கூட்டணி அமாவாசை இருளில் மூழ்கப் போகிறது.
எஸ்.வி.சேகர்
”நாட்டில் ஊழலே இல்லாத நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்திக்கும் வாய்ப்பை விஜயகாந்த் நழுவவிட்டு விட்டார். மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது விஜயகாந்தின் தனிப்பட்ட உரிமை. இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததற்காக அவரை நான் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை இழுபறி செய்யாமல் பல யூகங்களுக்கு வழி வகுக்காமல் இந்த முடிவை அறிவித்து இருந்தால் நாகரிகமாக இருந்து இருக்கும்.