ஆவரேஜ் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவர்கள் மற்றும் இன்ஜினீயரிங் அல்லாத பிற பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள்… ‘ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்கலாம்?’ என்ற தேடலில் இருப்பார்கள். அவர்களுக்கு வழிகாட்டல்கள் தருகிறார், கல்வியாளர் மற்றும் ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ நிறுவனர் நெடுஞ்செழியன்.
”ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதென வருந்தும் மாணவர்களுக்கு, உடனடி வேலைவாய்ப்பைத் தரும் படிப்புகள் நிறைய உள்ளன. தேடலை முடுக்கிவிட்டால், உங்களுக்கான படிப்பை நீங்கள் அடையாளம் காணலாம்!” என்று நம்பிக்கை வார்த்தைகளை முதலில் பகிர்ந்த நெடுஞ்செழியன், தொடர்ந்தார்.
டெக்னீஷியன் கோர்ஸ்கள்… வேலை தயார்!
”தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வருடம் படிக்கக்கூடிய டெக்னீஷியன் கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எக்ஸ்ரே டெக்னீஷியன், லேப் டெக்னீஷியன், டயாலிஸிஸ் டெக்னீஷியன், அனஸ்தீஷியா டெக்னீஷியன், ஈ.சி.ஜி டெக்னீஷியன் என்று பத்துக்கும் மேற்பட்ட கோர்ஸ்கள் இதில் அடக்கம். படிப்பு முடித்ததும் மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் லேப்களில் நிச்சயம் வேலை கிடைக்கும். இதில் சேர, ப்ளஸ் டூ-வில் பயாலஜி எடுத்துப் படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஜூலை இறுதி வரை வழங்கப்படும்.
எந்த குரூப் படித்தவர்களும் படிக்கலாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட்!
சென்னை, தரமணியில் உள்ள, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மத்திய அரசு நிறுவனத்தில், ஒரு வருட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பேக்கிங் அண்ட் கன்ஃபெக்ஷனரி, ஃபுட் புரொடக்ஷன், ஃபுட் அண்ட் பீவரேஜஸ் உள்ளிட்ட ஒன்றரை வருட டிப்ளமோ கோர்ஸ்களும் வழங்கப்படுகின்றன. ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் நேரடிப் பயிற்சியும் தரப்படுகிறது. ஜூன், ஜூலையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கோர்ஸ் முடித்தவுடன் நிச்சயம் நல்ல ஹோட்டலில் வேலை கிடைக்கும்” என்ற நெடுஞ்செழியன், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்ஜினீயரிங் தவிர்த்து, இப்போது அதிக தேவை இருக்கும் சில கோர்ஸ்கள் பற்றிக் கூறினார்.
ஆஹா அக்ரி!
”வேளாண் படிப்புகளுக்கு அதிக மவுசு இருக்கிறது. ப்ளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி அக்ரி, பி.டெக்., ஹார்டிகல்சர், பி.டெக்., ஃபுட் புராசஸ் இன்ஜினீயரிங், பி.எஸ்ஸி அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் என்று தேர்ந்தெடுக்கலாம். ப்ளஸ் டூ-வில் மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆன்லைனில் தற்போது வழங்கப்படுகின்றன. படிப்பை முடித்தவுடன் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்கள், உணவுத்துறை சார்ந்த நிறுவனங்களில் வரவேற்பு பலமாக இருக்கும்.
டெய்ரி படிப்புகள்!
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில், பி.டெக்., டெய்ரி டெக்னாலஜி தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கு வருடம் படிக்கக் கூடிய இந்தப் படிப்பில், பாலின் தன்மை, பாலை என்னென்ன உணவுகளுக்கு எந்தெந்த தன்மையில் சேர்க்கிறார்கள், பாலை வைத்து தயாரிக்கக்கூடிய உணவு வகைகள்… இப்படி பாலைப் பயன்படுத்தும் டெக்னாலஜி பற்றிக் கற்பிக்கப்படும். சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ப்ளஸ் டூ-வில் பயாலஜி அல்லது மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்துப் படித்தவர்கள் இதைப் படிக்கலாம்; பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்” என்ற நெடுஞ்செழியன்,
”அகில இந்திய அளவில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு முன், கரூரில் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மாணவியை சந்தித்தேன். இயல்பிலேயே வரையும் திறமையும் ஆர்வமும் இருந்ததை, அவள் அப்பா குறிப்பிட்டுச் சொன்னார். அவளுக்கு ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்’ கல்வி நிறுவனத்தை அறிமுகப்படுத்தினேன். இதற்கான நுழைவுத் தேர்வு விளம்பரம், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செய்தித்தாளில் வெளியிடப்படும். இதைச் சரியாக கவனித்து விண்ணப்பித்து, ஜனவரியில் நடந்த நுழைவுத் தேர்வு, ஏப்ரலில் நடந்த இறுதித் தேர்வு ஆகியவற்றில் வெற்றிபெற்று, அந்தக் கல்லூரியில் இடம் பிடித்துவிட்டாள் அந்தப் பெண் (இவரைப் பற்றிய கட்டுரை… அடுத்த பக்கத்தில்)
ஆக, எந்த படிப்பை தேர்ந்தெடுத்தாலும், இதில் நம்மால் சிறப்பாக படிக்க முடியும், வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு படியுங்கள். அதைவிடுத்து ஏதாவதொரு படிப்பில் சேர்ந்துவிட்டு, ‘கஷ்டமாயிருக்கு’, ‘பிடிக்கல’ போன்ற புலம்பல்கள் கூடவே கூடாது!” என்று அறிவுறுத்தினார்.