இவற்றின் உபயோகம் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதில் இருந்து விலக முடியாத நிலையில் இன்றைய தலைமுறை இருக்கிறது. இவற்றால் பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் அபாயமும் அதிகமாகிக் கொண்டே போகிறது. பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும் போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இது பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.
இந்த பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோ கார்பன், பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது. குப்பைக் கழிவுகளுடன் மண்ணில் பாலிதீன் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப் போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகள், சணல் பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் துணியால் ஆன மஞ்சள் பைகள் போன்றவற்றை பயன்படுத்தி சுகாதாரம் காக்க சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.