நாடு முழுவதும் டீசல் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும், பகலில் சரக்கு மற்றும் மணல் லாரிகள் நுழைய தடைக்கு எதிர்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் ஆரம்பமாகவுள்ளது. இதனால் இன்று இரவு முதல் கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு புக்கிங் செய்யும் பணி அனைத்து லாரி புக்கிங் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.
இந்த ஸ்டிரைக் காரணமாக வட மாநிலங்களில் இருந்த தமிழகத்திற்கு கர்நாடகம் வழியாக வரும் லாரிகள் அனைத்தும் ஆந்திர மாநிலம் வழியாக திருப்பிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் சரக்குகள் முற்றிலும் முடங்கியதால் சுமார் ரூ.200 கோடி வரை மதிப்புள்ள மஞ்சள், இரும்பு, கெமிக்கல் போன்றவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. நாளை மறுநாள் நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அகில இந்திய லாரிகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.