பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் நேற்று இரவு சென்னையில் காலமானார். 81 வயதான அவர் சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நேற்றிரவு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரது கே.கே நகரில் இல்லத்தில் அவர் மரணம் அடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிறுகதை, நாவல், கட்டுரைகள், திரைப்பட திரைக்கதை, வசனம் என பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்த ஜெயகாந்தனின் பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளன. அவர் எழுதிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், சினிமாவுக்கு போன சித்தாள், உன்னை போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர் ஆகிய நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளது.இவரே மூன்று திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
சாகித்ய அகாடமி, பத்மவிபூஷன், ஞானபீடம் உள்ளிட்ட பல உயர்ந்த விருதுகளைப் பெற்ற இவருக்கு ரஷ்ய அரசும் சிறப்பு விருது ஒன்றை கொடுத்து கெளரவித்துள்ளது.
கடலூரில் பிறந்த ஜெயகாந்தன் 14 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தங்கிய ஜெயகாந்தனுக்கு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அடைக்கலம் கொடுத்து அவருக்கு தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் கற்று கொடுத்தார். ஜெயகாந்தன் இன்று நம்மை விட்டு மறைந்தாலும், அவரது புரட்சிகரமான எழுத்துக்கள் காலத்தால் அழியாதது.