நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் முதல் பொதுக்குழு கூட்டம். ரஜினி, அஜித் கலந்து கொள்வார்களா?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்று பல ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் நாசர் தலைமையினான இளைஞர் அணி, மேலும் பல பணிகளை தொடங்கவுள்ளதால் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதன்படி புதிய நிர்வாகிகள் அடங்கிய முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பழம்பெரும் நடிகர் அமரர், P.U.சின்னப்பா அவர்களுடைய குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது நுற்றாண்டு விழா வீடியோ மற்றும் நடிகர் சங்கம் செயல்பாடுகள் பற்றிய வீடியோவும் பொதுக்குழுவில் திரையிடப்படும். மேலும் நடிகர் சங்கத்திற்கு என உருவாக்கபப்ட்டுள்ள “இணையதளம்” அன்றைய தினத்தில் வெளியிட உள்ளதாகவும், அதுமட்டுமின்றி தங்கள் வாழ்க்கையையே நாடகத்துறைக்கு அர்ப்பணித்த பழம்பெரும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் 2014 – 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்ய பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். மேலும் பொருளாளர் கார்த்தி, சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்தும், பொது செயலாளர் விஷால், சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்களை குறித்தும் உரையாற்ற உள்ளனர். அதன்பின்னர் பொன்வண்ணன் நன்றியுரையுடன் கூட்டம் முடியவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோர் வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.